நாகர்கோவில்:
சபரிமலையில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்ற
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது திட்டத்தில் வெற்றி பெற முடியாமல் ஐயப்ப
தரிசனம் செய்து திரும்பியுள்ளார். ஆனால் அவரை கேரள மாநில காவல்துறையினர் தடுத்துவிட்டதாக கூறி குமரி மாவட்டத்தில் வெள்ளியன்று கடை அடைப்பு, வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து விட்டு பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். 5 பேருந்துகள் மீது முதல்நாள் இரவே கல்வீசினர்.

இதன் பெயரால் வெள்ளியன்று காலை பேருந்துகளை அதிகாரிகளே முடக்கி வைத்தனர். இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வன்முறையின் ஒரு பகுதியாக, பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை சில இடங்களில் வெட்டி சாய்த்துள்ளனர். இச்சம்பவங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொன்னாரின் பொய்ப்பிரச்சாரம்
சபரிமலை பகுதியை கலவர பூமியாக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் பெரும் வன்முறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நவம்பர் 21 ஆம் தேதியன்று தனது ஆதரவாளர்களுடன் சபரிமலைக்கு சென்றார்.நிலக்கல் பகுதியிலிருந்து பம்பைக்கு மத்திய அமைச்சரின் வாகனத்தை அனுமதித்த காவல்துறையினர், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களின் காரை நிறுத்தி அவர்களை பேருந்தில் வருமாறு கூறினர். ஆனால் தனது ஆதரவாளர்களின் வாகனத்தையும் தன்னுடன் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொன். ராதாகிருஷ்ணன், பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் ஏறி சபரி மலைக்கு சென்றார். இத்தகவல் கிடைத்தவுடன், குமரி மாவட்ட பாஜகவினர் மத்திய அமைச்சர் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்டு 21 ஆம் தேதியன்று தக்கலை மற்றும் களியக் காவிளையில் கேரள பேருந்துகளை தடுத்தும், கேரள முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பாஜகவினர் வெள்ளிக்கிழமையன்று குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
அறிவித்தனர்.

வியாழனன்று இரவே, மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 8க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.வெள்ளிக்கிழமையன்று காலை 8 மணி வரை, நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களும், அலுவலகத்துக்கு செல்வோரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். காலை 8 மணிக்கு பின்னர், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் காவல்துறையினர் பாது காப்புடன் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தம் அறி விக்கப்பட்டும், வழக்கம் போல் அரசு பள்ளிகள் இயங்கின. இருப்பினும், ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே விடுமுறை அறிவித்திருந்தன. கன்னியாகுமரியில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.
பாஜக கும்பலின் வன்முறை காரணமாக வெள்ளியன்று நடக்கவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், ஆரல்வாய்மொழி, தக்கலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற 12 அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசிதாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன.போக்குவரத்து துறை சார்பில், 12 பேருந்துகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு சம்பவம் தொடர்பாக, மாவட்ட காவல்துறை
சார்பில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் திருகார்த்திகை கொண்டாட்டம் மற்றும் அதை சார்ந்து நடக்கும்
வணிக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக, தோவாளை மலர் சந்தையில் பூ விற்பனை வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டதாக, பூ மொத்த வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

சிபிஎம் கொடி மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
பாஜகவினரின் வன்முறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி கூறுகை யில், அருமனை பகுதியில் மாத்தூர் கோணம், புதுவல், மங்காத்துவிளை, பட்டான்விளை, மாத்தூர்கோணம் அம்பலம் ஆகிய இடங்களில் இருந்த சிபிஎம் கொடிகம்பங்களை பாஜகவின்ர வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். அதை வன்மை யாகக் கண்டிக்கிறோம் என்றார்.

மேலும், மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அரசுப் பேருந்துகளை பல பகுதிகளில் இயக்க
வில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்றுவர இயலாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக
கல்லூரிகளில் வெள்ளியன்று தேர்வுகள் நடை பெற்றதால் பேருந்து வசதியின்றி மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. சபரிமலை பிரச்சனையை அரசியலாக்கி குமரி மாவட்ட மக்களிடம் பதற்றத்தை உருவாக்கி அரசுப் பேருந்துகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தி அமைதியை சீர்குலைத்துவரும் தீய சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் செல்லசுவாமி கூறினார்.

பொதுவாக சிறு பிரச்சனைகளுக்காக பாஜக தேவையில்லாமல் பந்த் அறிவிப்பதும், சில பேருந்துகளை கல்வீசி சேதப்படுத்துவதும், இதன் பெயரில் பேருந்துகளை ஓட்டாமல் நிறுத்துவதும், பிரச்சனைகளை உருவாக்கும் பாஜகவினர் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், தொடர் செயலாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.