===என்.ராஜேந்திரன்===
டிவிட்டர் கணக்கை உலகம் முழுவதும் சுமார் 33 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 23ஆம் தேதி டிவிட்டரின் செல்போன் செயலிகளில் அதிகம் விரும்பப்படாத வசதி என்று கூறி மொமேன்ட்ஸ் வசதியை நீக்கியது. இவ்வசதி செயலிகளுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என்றும் டெஸ்க்டாப் கணினிகளில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் டிவிட்டர் அறிவித்துள்ளது.டிவிட்டர் ரசிகர்களுக்கு மற்றொரு செய்தியும் உண்டு. நாம் வெளியிடும் டிவீட்களை எடிட் செய்து கொள்ளும் வசதிதான் அது. எனக்கு சரியாத் தெரியல, அட்மின் செஞ்சது என்று சாக்கு போக்கு சொல்லாமல் சரி செய்து திருத்திக் (?!) கொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்கு எடிட் பட்டன் ஒன்றை இணைக்க முடிவெடுத்துள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதே போல தற்போது டிவிட்களை லைக் செய்ய பயன்படுத்தும் பட்டனை நீக்கலாமா என்கிற ஆலோசனையும் பரிசீலனையில் உள்ளதாம். இந்த வசதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

கூகுள் பிளஸ்: வெளியேறும் நேரம்
ஃபேஸ்புக் தளத்திற்குப் போட்டியாக கூகுள் உருவாக்கிய கூகுள் பிளஸ் தளம் வரும் 2019 மார்ச் மாதத்துடன் தன் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்குக் காரணம், ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டதுபோன்றே கூகுள் பிளஸ் பயனர்கள் சுமார் 5 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக வந்த தகவலும் ஒரு காரணம். அத்துடன், கூகுள் அலோ, டியோ போன்ற புதிய சமூக வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியிருப்பதால் கூகுள் பிளஸின் தேவை அநாவசியம் மற்றும் கூடுதல் சுமை என்று கருதி சேவையை முற்றிலும் நிறுத்திவிடலாம் என்ற முடிவிற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

நீங்கள் கூகுள் பிளஸ் பயன்படுத்துபவராக இருந்து, அதில் எந்த முக்கியத் தகவலும் இல்லை என்பவர்கள் கவலைப்படாமல் அப்படியே விட்டுவிடலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஏதேனும் இருந்து, பாதுகாப்புக் கருதி கணக்கை முடித்துக் கொண்டு வெளியேற எண்ணினால் கீழ்க்கண்ட செயல்பாடுகளைச் செய்து வெளியேறலாம். முதலில் ஜிமெயில் கணக்கை திறந்து, மேற்புறம் வலது முனையில் உள்ள உங்கள் சுயவிபரப் படத்துடன் கூடிய செட்டிங்ஸ் பட்டனைக் கிளிக் செய்யவும். உங்கள் ஜிமெயில் கணக்கு கூகுள் பிளஸ் கணக்கு உடன் இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், உடனே உங்கள் கூகுள் பிளஸ் கணக்கின் ப்ரோபைலை அது காட்டும். Google+ Profile என்ற லிங்க்கை கிளிக் செய்து கூகுள் பிளஸ் கணக்கிற்குள் நுழையவும். தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள பட்டியலில் அமைப்புகள் (Settings) என்பதன் மீது கிளிக் செய்யவும். தோன்றும் பக்கத்தை ஸ்குரோல் செய்து பார்த்தால் கடைசியாக இருக்கும் கணக்கு (Accounts) என்பதில் Google+ சுயவிவரத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் கணக்கை சரிபார்க்க, பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதனை அளித்தால் கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவதற்கான திரை தோன்றும்.

அதில் உள்ள விபரங்களைப் படித்துப் பார்க்கவும். கீழே கடைசியாக “மற்ற கூகுள் தயாரிப்புகளின் மூலம் நான் யாரையாவது ஃபாலோ செய்தால், அதை அன்பாலோ செய்யவும்” மற்றும் “ஆம், கூகுள் பிளஸ் ப்ரோபைலை (உங்கள் பெயரில்) (email@gmail.com) என்பதை டெலிட் செய்ய போகிறேன் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் இந்த செயலை திரும்ப பெறவோ, நான் அழித்த தகவல்களை மீட்கவோ முடியாது என்பதை அறிந்து இருக்கிறேன்” என்று இரண்டு கேள்விகளுக்கும் டிக் மார்க் கொடுத்து நீக்க (Delete) பட்டனைக் கிளிக் செய்யவும். இதன் முடிவில், செயல் நிறைவடைந்ததற்கான அறிவிப்பும், சர்வே தகவல்களும் காட்டப்படும்.

வாட்ஸ்அப்: வருகிறது விரைவுக் குறியீடு
பல நாட்களாக வாட்ஸ்அப் செயலியில் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஸ்மைலி சித்திரங்கள், கிஃப் படக் கோப்புகள் பட்டியலில் ஸ்டிக்கர்களும் தற்போது இடம் பிடித்துள்ளன. வசதி அறிமுகமான சில நாட்களிலேயே ஸ்டிக்கர்கள் உருவாக்கும் புதிய செயலிகள் பலவும் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் முளைத்துள்ளன. இவற்றில் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று கூறி ஆப்பிள் நிறுவனம் சிலவற்றை தன்னுடைய ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. ஆண்ட்ராய்டில் உள்ள ஸ்டிக்கர் உருவாக்கும் இதுபோன்ற ஆப்ஸ்களிலும் தீங்கு விளைவிக்கும் அம்சங்கள் இருக்கலாம். எனவே, எச்சரிக்கையாகப் பயன்படுத்துங்கள்.இன்ஸ்டாகிராமில் நேம்டேக் என்ற பெயரில் QR Code களைப் பயன்படுத்தி நம்முடைய விபரங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. அதேபோல நம்முடைய தொலைபேசி எண், முகவரி போன்ற விபரங்களை எளிமையாக விரைவுக் குறியீடாக (QR Code ) மாற்றி அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் செயலியும் வழங்க முடிவெடுத்துள்ளது.

தகவலைப் பாதுகாக்க கூகுள் டிரைவ்
வாட்ஸ்அப் கணக்கில் உள்ள தகவல்கள் படங்களை பேக்கப் செய்வதற்கு கூகுள் டிரைவ் கணக்குடன் விரைவாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டுள்ளது. தற்போது கூகுள் டிரைவுடன் இணைத்து பேக்கப் செய்யாதவர்கள் வாட்ஸ்அப் அப்டேட் செய்யும்போது பழைய தகவல்கள் அனைத்தும் அழிந்து விடும் என்று மீண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.வாட்ஸ்அப் தகவல்களை பத்திரப்படுத்த விரும்புவோர் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பேக்கப் பகுதியில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து கூகுள் டிரைவ் பேக்கப் வசதியை இயக்கி தகவல்களை சேமித்துக் கொள்ளவும். கூகுள் தரும் 15 ஜிபி இடவசதியில் வாட்ஸ்அப் தகவல்களுக்கான இடம் கணக்கிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.