திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்தபோது விபத்தில் விரல் துண்டான பெண்ணுக்கு சிஐடியு தலையீட்டின்பேரில் இழப்பீட்டுத் தொகை ரூ.1.80 லட்சம் பெற்றுத் தரப்பட்டது. இது பற்றிய விபரம் வருமாறு: கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஆதிவராக நத்தம் கிராமம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்னவி. இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் இருக்கும் குமரன் ஜின் அன்ட் பிராசஸிங் என்ற நூற்பாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி இந்நிறுவனத்தில் ஐஸ்னவி வேலை செய்து கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கி வலது கை ஆள்காட்டி விரல் துண்டானது. உடனடியாக சூலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. எனினும் துண்டான விரலை இணைக்க முடியவில்லை.இந்த பிரச்சனை தொடர்பாக சிஐடியு திருப்பூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் கவனத்துக்கு வந்தது.

இதன் அடிப்படையில் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர் பி.முருகேசன், மாவட்டப் பொருளாளர் கே.பழனிசாமி ஆகியோர் மேற்படி நூற்பாலை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க கோரினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐஸ்னவிக்கு நூற்பாலை நிர்வாகம் ரூ. 1லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டது. அதன்படி (நவ.20)் தேதி செவ்வாயன்று இந்த தொகைக்கான காசோலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டது. இந்த நிதி வழங்கியபோது, சிஐடியு மாவட்டப் பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, ஐஸ்னவியின் தாயார் அம்புஜம், உறவினர்கள் ராஜேஷ், தங்கசாமி, சிஐடியு கடலூர் மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயசீலன், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த டி.பிரபுதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். ஐஸ்னவிக்கு மேற்படி நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட திட்டங்களில் கிடைக்கக்கூடிய பணப்பலன்களையும் பெற்றுத் தர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்து உள்ளதாக ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.