புதுக்கோட்டை:
மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், கோவை பொது மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை புதனன்று வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் கீழாத்தூர், வெள்ளக்குளம், கட்டரம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் பெறுமான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 4000 லிட்டர் மினரல் குடிநீர், 5000 மெழுகுவர்த்தி, 10000 தீப்பெட்டிகள், 3000 பிஸ்கட் பாக்கெட், 4000 சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அதில் அடங்கும். மதுரையில் நிவாரணப் பணிகளுக்கான வாகனத்தை மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொது செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தலைவர்கள் பங்கேற்பு
நிவாரணப் பணிகளுக்கு தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர். புண்ணிய மூர்த்தி, மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் ஜி. மீனாட்சிசுந்தரம், தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை எல்.ஐ.சி கிளை மேலாளர் அருள், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொது செயலாளர் எம்.புஷ்பராஜன், கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பையா மற்றும் புதுக்கோட்டை அசோகன், கண்ணம்மாள் ஆகியோர் தலைமையேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கமும், புதுக்கோட்டை கிளை சங்கமும் செய்திருந்தன.

அடுத்தடுத்த கட்டம்
முதல் கட்டமாக சீர்காழி கிளை நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தார்கள்.
கோவை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ரூ. 1.25 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

500 தார்பாலின், 1000 சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனம் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு புதனன்று வந்து சேர்ந்தது.தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் முதற் கட்டமாக ரூ. 1.25 லட்சம் பெறுமான போர்வைகள் வியாழனன்று விநியோகிக்கப்படவுள்ளன.

“அடுத்தடுத்த கட்ட நிவாரணங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கிராமங்களுக்கும் செல்லவுள்ளோம். தமிழகம் முழுமையும் உள்ள எல்.ஐ.சி, பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இதற்கான பங்களிப்புகளை வழங்கி வருகிறார்கள்” என்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர். புண்ணிய மூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.