கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பகளை சரி செய்ய கேரள மின் ஊழியர்களை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பும் பணியை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மாநிலம் முழுதும் சுமார் 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின் விநியோகமும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் தடைபட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் புயலால் பெரிதும் சேதமைடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. இருந்த போதிலும் பெரிய அளவில் பணியை துரிதப்படுத்தாத முடியாத சூழலில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பல கிராம மக்கள் இருளில் மூழ்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

இந்த நிலையில் நவ-20ம் தேதியன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர், புது துணிகள், மெழுகுவர்த்தி, உலர்ந்த உணவுப்பொருள்கள் போன்றவை வழங்கப்படும் என்று பினராயி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப்பணிகளை கேரள பேரிடர் மீட்புக்குழு ஒருங்கிணைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்பொழுது சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்வதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில், அம்மாநில மின்சாரத்துறை முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக கேரள மின்ஊழியர்களை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து தமிழக மக்களை பாதுகாக்கும் வேலையை கேரள அரசு செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.