கஜா புயலால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து நிர்கதியாக நிற்கும் காவிரி டெல்டா மக்களைப் பாதுகாக்க உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டி அரசு ஆலோசிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று விடுத்துள்ள அறிக்கை

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலின் கோரத்தாண்டவம் மக்களை புரட்டிப் போட்டிருக்கிறது. வீட்டை இழந்து, கால்நடைகளை இழந்து, உணவுப்பயிர்கள் அனைத்தும் புயல் மற்றும் மழையில் அழிந்து மக்கள் அனைவரும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

குடிசை மற்றும் வீடுகள் கடும் சேதமடைந்து குடியிருக்கவே லாயக்கற்றதாகி விட்டன. நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. முந்திரி, சவுக்கு, மா, பலா உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, காணும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. நமக்கு தெரிந்தவரையில், இதற்கு முன்னால் எப்போதும் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அரசு நிர்வாகம் தோல்வி
புயல் வருவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்களுக்கு அறிவிப்பு செய்த தமிழக அ ரசு புயலுக்கு பின் நிலைமைகளை சீர் செய்ய எந்தவித முன்தயாரிப்புகள் செய்யவில்லை என்பதுதான் வேதனையளிப்பதாக உள்ளது. அரசு முன்கூட்டியே தமிழகம் முழுவதுமிருந்து டேங்கர் லாரிகள், ஜெனரேட்டர்கள், மின்சார ஊழியர்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றவைகளை இப்பகுதிக்கு வரவழைத்திருந்தால் புயல் பாதிப்பு ஏற்பட்ட அடுத்த விநாடியே புயலை விட வேகமாக நிவாரணப்பணிகளை துவங்கி மக்களை பெருமளவு காப்பாற்றி இருக்க முடியும். மேலும் அதிமுக அரசின் கையலாகாத்தனத்தால் உள்ளாட்சிமன்றத் தேர்தல்கள் நடத்தப் படவில்லை.

இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே, ஏற்பட்டுள்ள அனைத்து துயரங்களுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். இதனால் 5 நாட்கள் கடந்த பின்னரும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குக் கூட போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் தன்னெழுச்சியாக பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாறாக, முதலமைச்சரும், இதர அமைச்சர்களும் எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாக குற்றம் சாட்டுவது நகைப்பிற்கு உரியதாகும்.

மின் ஊழியர்களுக்கு பாராட்டு
தற்போது மின்ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு மழை, காற்று, கடும் குளிர் இவைகளை பொருட்படுத்தாமல் உயிரைப்பணயம் வைத்து பாராட்டக்கூடிய அளவிற்கு பணியாற்றிக் கொண்டுள்ளனர். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேநேரத்தில் புயல் பாதித்து 5 நாட்கள் கழித்து இப்பகுதியை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் வானிலையை காரணம் காட்டி தரையில் இறங்காமலேயே சென்றுள்ளார். ஊழியர்களும், அதிகாரிகளும் நிவாரணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடும் குளிரிலும், இருட்டிலும் சொல்லொணா கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் இறங்கி வந்து பார்க்காமலேயே சென்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

கூடுதல் மின் ஊழியர்களை ஈடுபடுத்துக!
போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கம்பங்களை உடனடியாக வெளிமாநிலங்களிலிருந்தும் பெற்று மின்சாரம் வழங்க வேண்டும். கூடுதலான மின்ஊழியர்கள் மற்றும் உபகரணங்களையும் வரவழைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். அதுவரை கிராமங்களில் குடிநீர் தேவைக்கும், மின் விளக்குகளுக்கும் வெளி மாவட்டங்களிலிருந்து ஜெனரேட்டர்களை வரவழைத்து இயக்க வேண்டும்.

அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுக!
அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. இந்த அறிவிப்புகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரண நிதியாக வழங்குவது என அரசு அறிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த ரூ.5000 வழங்கப்பட வேண்டும், குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் என்பது போதுமானதல்ல, இந்த தொகையை உயர்த்தி குடிசை வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம், பகுதி அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும். அதே போல், நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும், தென்னை சாகுபடிக்கு ஏக்கர் கணக்கில் நஷ்ட ஈடு வழங்குவதற்கு மாறாக, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20000 வழங்க வேண்டும். அதே போல் இறந்துபோன மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.8 ஆயிரமும் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மீனவர்களுக்கு சேதமடைந்துள்ள படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான நிவாரணம் வழங்கிட வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டுக!
மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், நிவாரணப்பணிகளை முழுமையாக மேற்கொள்ளவும் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் வீடுகள், கால்நடைகள், உணவுப்பயிர்கள், மரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அழிந்து போயுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பு அளவிட முடியாததாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முறையான கணக்கெடுப்புகள் நடத்திட வேண்டும்.

கஜா புயல் பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவித்திடவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டை பெற்றிடவும் மத்திய அரசை வற்புறுத்துவதற்கு அனைத்துக்கட்சி தலைவர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்தித்து வற்புறுத்துவதற்கான ஏற்பாட்டினை தமிழக முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட பொருட்களை வசூலித்து அனுப்பிட வேண்டுகோள்!
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான உணவுப்பொருட்கள், பால் பவுடர், பிஸ்கெட்டுகள், போர்வை, பாய் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பொதுமக்களிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது, மேலும் குடிதண்ணீர், மருத்துவ உதவி கிடைக்கச் செய்வது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் பெருமளவு ஈடுபட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.