புதுதில்லி, நவ.21-

ஊடகங்களில் பாலியல்ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி (Indian Women’s Press Corps)யின் தலைவர் டி.கே. ராஜலட்சுமி மற்றும் பொதுச் செயலாளர் ரவீந்தர் பாவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதற்கு இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக முறையிடும் பெண்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடர்வோம் என்று அச்சுறுத்தும் போக்கும் அதே அளவிற்கு அதிகரித்துக்கொண்டிருப்பதற்கும் இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு ஒரு மூத்த பெண் பத்திரிகையாளர்  தான் பணியாற்றும் சஞ்சிகையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை விவரமாகத் தெரிவித்ததற்காக அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதே ஓர் எடுத்துக்காட்டாகும். பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது நன்கு ஊடுருவியுள்ள நிகழ்வுகள் என்பதையும், அவை கடந்த காலங்களில் நடைபெற்றிருந்தாலும் சரி அல்லது தற்போது நடந்தாலும் சரி, அவை தொடர்பாக பெண்கள் முறையிடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதையும் இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி அங்கீகரிக்கிறது. அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என்று பெண்களை அச்சுறுத்துவது என்பது பெண்களை தங்கள்மீது ஏவப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்கிற எண்ணத்தையோ அல்லது புகார் அளித்திருந்தால் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான கட்டாயத்தையோ ஏற்படுத்தும் என்று இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி கருதுகிறது.

தங்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பேசுவதற்கான தைரியத்தையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டியது அவசியம் என்று இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி நம்புகிறது. இதுபோன்று பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகள் வரும்போது அவற்றை உரிய அமைப்புகள்  முறையாக விசாரணை நடத்த வேண்டியதும் அவசியம் என்று இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி நம்புகிறது.

இதுபோன்று பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுமாயின் அவற்றை சகித்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று ஊடகங்களும் வலுவான முறையில் அறிவித்திட வேண்டும்.

இவ்வாறு இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.