கோவை : கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் அதிர்ச்சி காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய், பூனைகள் ஏராளமானவை உலாவி வருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற 60 வயது மதிக்கதக்க பெண் நோயாளி ஒருவர் திங்களன்று இரவு உயிரிழந்தார். அவரின், உடலை பிணவறைக்கு உடனடியாக கொண்டு செல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அப்போது, அந்த வார்டில் சுற்றித்திரிந்த பூனை ஒன்று தரையில் கிடத்தப்பட்டிருந்த இறந்த பெண்ணின் கால் கட்டை விரலை கடித்து இழுத்துள்ளது. இதை கண்ட அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும், ஊழியர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.  இது இணையதத்தில்வேகமாக பரவிவருகிறது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது, பூனை கடித்ததாக கூறும் பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கால்களில் புண்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் அவரைவார்டில் சேர்த்தார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், திங்களன்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்தார். நோயாளி பிரிவில் இருந்து 10.30 மணிக்கு அவரின் உடல் பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது. பூனை அவரை கடிக்க வில்லை. இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்தது என்பது முற்றிலும் தவறானது. அதேநேரம், மருத்துவமனையில் சுற்றி திரியும் பூனை, நாய், எலிகளை பிடிக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரம், கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்றவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில்லை எனவும், சம்பவம் தொடர்பாக வார்டில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு ஊழியர்கள், முதுநிலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.