காபூல்,
ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், மிலாது நபியையொட்டி, வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் நேரப்படி, 6.15 மணியளவில், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 50க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Leave A Reply

%d bloggers like this: