=== பி.என்.தேவா===                                                                                  தீபாவளி முடிந்துவிட்டது. அடுத்தாண்டு மீண்டும் வரும். ஆனால் தீபாவளியின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் பட்டாசு, அடுத்தாண்டு கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

தீபாவளி மட்டுமல்ல; கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுக்கு முக்கிய இடமுண்டு. இந்தியா முழுவதும் தேவையான பட்டாசுகள் சிவகாசியை சுற்றியுள்ள 1072 பட்டாசு ஆலைகள் மூலம் 95% உற்பத்தி செய்யப்படுகிறது. உலக பட்டாசு தேவையில் 80% பட்டாசு உற்பத்தியை சீனா செய்து வருகிறது. இந்தாண்டு தீபாவளி முடிந்து ஆலைகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கடந்த 13.11.2018 முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக பூட்டுவதற்கு தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 25CCm படி அறிவிப்பு செய்து தலைமை செயலாளர் மூலம் உத்தரவு கோரப்பட்டதாக தெரிகிறது. இது பட்டாசுத் தொழிலை நம்பி உள்ள 8 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் மட்டுமல்ல, அது சார்ந்த சார்பு தொழிலாளர்களான சுமைப்பணி, அச்சு, ஒட்டுமொத்த வணிகம் என மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

இந்த நிலைக்கு யார் காரணம்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2016 நவம்பர் 8 அன்று ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவித்தது. இதன் எதிரொலியாக சிவகாசியில் முழுக்க முழுக்க வாரச் சம்பளம் பணமாக பெற்று வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வங்கிக் கணக்கு துவங்கி அதன் மூலம் சம்பளம் பெற வேண்டும் என்ற சூழல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்து வங்கியில் சம்பளம் பெறும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் பல லட்சம் மனித உழைப்பு நாள் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த கட்டமாக மோடி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரி 28% உயர்த்தப்பட்டது. இது தொழிலையே நடத்த முடியாது என ஆலை மூடல் வரை சென்றது. இதை எதிர்த்து சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்ற போராட்டம் நடத்தி 10% ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டது. இப்படியாக மத்திய அரசின் கொள்கை பட்டாசுத் தொழிலை நெருக்கியது.

சுற்றுச்சூழல் பிரச்சனையும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்
இதற்கு சற்று முன்னதாக, 2015ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர், பட்டாசு வெடிப்பதால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது; எனவே தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2016 மற்றும் 2017இல் தீபாவளியை ஒட்டிய நாட்களில் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதித்தது. மேலும் தீபாவளிக்கு முன்பும், தீபாவளி முடிந்த பிறகும் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அளவிடப்பட வேண்டும் என்று தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில் காற்றை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி மற்றும் அதையொட்டிய நாட்களில் கடும் காற்று மாசு இருப்பதை கண்டறிந்து அறிக்கை கொடுத்தது. பட்டாசு வெடிக்காமலேயே தில்லியில் காற்று மாசு கூடுதலாக இருந்துள்ளது. இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவதற்கு பட்டாசு வெடிப்பதுதான் காரணம் என்ற கருத்தில் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மட்டுமல்ல; நாடு முழுவதுமே காற்று மாசு ஏற்படுவதற்கும் சுற்றுச்சூழல் கெடுவதற்கும் மிகமுக்கியமான காரணம் பெரும் கார்ப்பரேட் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சாலைகளில் செல்லும் கோடிக்கணக்கான மோட்டார் வாகனங்களும் தான் என பல்வேறு ஆய்வு முடிவுகள் உள்ளன. குறிப்பாக தில்லியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானி குழுமத்தின் மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பெட்கோ என்னும் எரிபொருள் வெளியிடும் கடும்புகை உடனே தடை செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2016ல் உத்தரவிட்டும் அது தடை செய்யப்படவில்லை.

இது ஒருபுறமிருக்க பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிப்பதற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று சுபாஷ் தத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் 2016ல் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

பசுமைப் பட்டாசு எங்கே உள்ளது?
இந்த வழக்குகளில் 2018 அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 31ல் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் பட்டாசு தொழிலை மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி; கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று 35 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி; 60% பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் ஒலி எழுப்பும் தன்மை கொண்ட பேரியம் நைட்ரேட்டுக்கு தடை; சரவெடி தயாரிக்கக் கூடாது; மேலும் 20% உற்பத்திக்கு தடை; இதையும் மீறி பட்டாசு தயார் செய்தால் அது பசுமைப் பட்டாசாக இருக்க வேண்டும் என இல்லாத ஒன்றை கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு பட்டாசு உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக, நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது.

தீர்ப்பின் பின்னணியில் இருப்பது மத்திய அரசே!
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழங்கிடவில்லை. வழக்கு விசாரணையின் போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அறிக்கையில்தான் சரவெடி தடை செய்யப்பட வேண்டும்; பேரியம் நைட்ரேட் தடை செய்யப்பட வேண்டும்; பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் 8 லட்சம் உழைப்பாளி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்தொழிலை அழித்து விட்டு எங்கிருந்தோ பட்டாசை இறக்குமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்க கார்ப்பரேட்டுகளுக்கு மத்திய அரசு வழிவகை ஏற்படுத்தியுள்ளதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. பட்டாசு உற்பத்திக்கும், வெடிப்பதற்கும் தடையில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் சரவெடி தடை, பேரியம் நைட்ரேட் தடை மூலம் ஒட்டுமொத்த பட்டாசுக்கும் தடை விதித்துள்ளது.

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு
இந்தநிலையில்தான் தீபாவளி தினத்தன்று, நீதிமன்றம் வழங்கிய 2 மணி நேரத்தை தாண்டிய பட்டாசு வெடித்ததற்காக தமிழகத்தில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பட்டாசு உற்பத்தி செய்யும் விருதுநகர் மாவட்ட மக்கள் மீது மட்டும் 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விதிமீறி பட்டாசு வெடித்ததற்காக தில்லியில் 637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அப்படியானால் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தொடர்ந்து சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்த மாநில அரசும் செய்யாத வகையில், முதல்வர், வழக்கு போட்டதன் மூலம் இவர்கள் இத்தொழிலை அழிக்க துணை போகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டாஸ்மாக் அரசு
இன்னும் கொடுமை என்னவென்றால் இந்தாண்டு தீபாவளிக்கு நவம்பர் 5ம் தேதி மாநில அரசு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அறிவித்தது. இது ஏதோ தமிழக மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவதற்கு நல்ல முடிவு என்று நினைத்தோம். ஆனால் தீபாவளி மறுநாள் செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதற்காக ஒரு நாள் கூடுதல் விடுமுறை என்பது. இந்தாண்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடுமையாக அமல்படுத்திய எடப்பாடி அரசு, 30% பட்டாசு விற்பனையை தடுத்துள்ளது. அதே நேரம் டாஸ்மாக் விற்பனையை ஒரு நாள் கூடுதல் விடுமுறையோடு 30% விற்பனை அதிகரித்து ரூ.600 கோடி தமிழக உழைப்பாளர் குடும்பங்களை குடிக்குள் தள்ளி பரிதவிக்க விட்டுள்ளது. இந்த அரசுகள் யாருக்காக; இவர்கள் மூலம் அமலாகும் சட்டம் யாரை வாழ வைக்க என்ற கேள்வி எழுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும் தனித்தனியாக பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளது. அதாவது பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்கக் கூடாது, பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும்; இதை மீறினால் ஆலைகள் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படுமாம். அப்படி இரத்து செய்தால் மீண்டும் உரிமம் பெற உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்று அறிவிப்பினை அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் வழங்கியுள்ளனர். மேலும் பசுமை பட்டாசு தவிர வேறு எந்த பட்டாசும் கடைகளில் வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் கடைகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலைகள் நிரந்தரமாக பூட்டப்பட்டு 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்; தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். மேலும் பட்டாசு வெடிப்பதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. வெடிபொருள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே ஒலி மாசு அளவு கட்டுப்பாடு உள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உண்மை நிலையை சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் இந்திய உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து போராடும்.

அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் இத்தொழிலை அழித்து பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க வழிவகுக்கும் போக்கை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தும். பட்டாசு தொழிலை, தொழிலாளர்களை சிஐடியு பாதுகாக்கும்.

கட்டுரையாளர் : சிஐடியு, மாவட்டச் செயலாளர், விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

You must be logged in to post a comment.