திண்டுக்கல், நவ.20
திண்டுக்கல் சாலையில் கஜா புயலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட 50 ஆண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கொடைக்கானல், சிறுமலை, மற்றும் பெரும்பாலான கிராமப்பகுதிகளில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பாரங்கள், வாக்கிடாக்கி டவர்கள் சாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் மிகவும் ஆமை வேகத்தில் பணியாற்றி வருவதால் இன்னும் 75
சதவீதம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் மின் விநியோகம் இல்லாமல் இருளில் மூழ்கிய நிலையே தொடர்கிறது. திண்டுக்கல் சாலையில் ஜி.டி.என். கல்லூரி அருகே வாழை தோட்டம் நாசமாகி உள்ளது. ஆர்.வி.எஸ் கல்லூரி முன்பாக இரண்டு பிரம்மாண்டமான மரங்கள் சாய்ந்துள்ளன. இதே போல் சாலையில் புளியமரங்கள், கொடைசீத்தமரங்கள், வேலாமரங்கள்,
குளங்களில் உள்ள கருவேலமரங்கள், பனைமரங்கள், ஆலமரங்கள், வேப்பமரங்கள், என பல வகையான மரங்கள் சாலையில் வேருடன் பெயர்ந்து கிடக்கின்றன. எரியோட்டில் திண்டுக்கல் காவிரிக் கூட்டுக்குடிநீர் வழங்கும் நீருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட வாக்கிடாக்கி டவர் சூறைக்காற்றால் அப்படியே வளைந்து உள்ளது. இதே பகுதியில் டிரான்ஸ்பாரம் சாய்ந்து உள்ளன. மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்து உள்ளன. இந்த பகுதியில் துணை மின் நிலையம்
இருந்தும் கூட இப்போது வரை மின்விநியோகம் முழுமையாக தரப்படவில்லை. இதே போல் செல்லக்குட்டியூர் பகுதியில் தேக்குமரத்தோட்டமும், முருங்கை தோட்டமும் சேதமடைந்துள்ளன. நல்லமனார்கோட்டையில் சூறைக்காற்றால் வெங்காயப்பட்டறை நாசமடைந்து மழைநீர் நிரம்பியதால் வெங்காயம் செடியாக முளைத்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் எரியோடு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகிறார்கள். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.