உதகை: சட்டத்தையும், ஜனநாயக மாண்புகளையும் மீறும் காவல்துறையின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலகிரி மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலகிரி மாவட்டக்குழு கூட்டம் உதகையில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, அண்மைக்காலமாக நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் நடத்துகின்ற இயக்கங்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.

முன்னரே அனுமதி கோரி கடிதம் அளித்திருந்தாலும் கூட, கடைசி நேரத்தில் காவல் சட்டம் அமலில் உள்ளதாக கூறி அனுமதி மறுத்து கடிதம் அளிக்கும் போக்கு உள்ளது. அண்மையில் நகராட்சி வரி உயர்வை கைவிட வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி கோரியிருந்த போது, அனுமதியை மறுத்த காவல்துறை முதல் நாள் நள்ளிரவில் மாவட்டக்குழு அலுவலக கதவில் அனுமதி மறுப்பு கடிதத்தை ஒட்டிச் சென்றனர். அதேபோல், சத்துணவு ஊழியர்கள் மறியலின் போது அங்கிருந்த காவல்துறையினர் போராட்டக்களத்தில் இருந்த யெண்களை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புநடைபெற்ற போராட்டத்தின் போது அச்சங்கத்தின் மாவட்டத் தலைவரின் கையை முறுக்கி தூக்கி வண்டியில் ஏற்றி கைது செய்ததோடு, அருவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.

சட்டத்தையும், பொது அமைதியையும் நிலை நாட்ட வேண்டியகாவல்துறை இத்தகைய தன்மையில் நடந்து கொள்வதும், சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொள்வதும் சரியானதல்ல என சுட்டிக் காட்டுவதோடு, காவல்துறைனரின் அணுகுமுறையில் மாற்றம் தேவை எனவும் ஜனநாயக இயக்கங்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநீலகிரி மாவட்டக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.