இராமநாதபுரம்:
20 நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. புதன்கிழமை முதல் தொழிலாளர்கள் பணிக்கு செல்கிறார்கள்.

இதுதொடர்பாக சிஐடியு இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், அரியர்ஸ் நிலுவைத்தொகை வழங்கவேண்டும், தொழில் செய்ய அடிப்படை பொருள்கள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1.11.2018 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 9.11.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் சமரசம் ஏற்படாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 19.11.2018 அன்று உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஹர்சகாய் மீனா பங்கேற்ற பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் மேலாண்மை இயக்குநருடன் பொது மேலாளர் தயனந்தன், திட்ட மேலாளர் விஜயன் ஆகியோரும், தொழிற்சங்க தரப்பில் சிஐடியு மாநில உதவிச் செயலாளர் வீ.குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, சங்க தலைவர் கே.பச்சமால், பொருளாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இப்பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் 20 சதவீத போனஸ் தருவதாக  ஒத்துக்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக 8.33 சதவீத போனஸ் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் 20.11.2018 க்குள் தொழிலாளர்கள் கணக்குகளில் ஏற்றப்படும் என்றும், மீதம் 10 சதவீத பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 2014-2015 அரியர்ஸ் நிலுவைத்தொகை மார்ச் இறுதிக்குள் வழங்கப்படும், மார்ச் இறுதிக்குள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது போன்ற உறுதிமொழியை மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட நிர்வாக தரப்பில் உறுதியளித்தனர். நிறுவனத்தின் நிதி நிலையை கவனத்தில் கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் பேசுவதாக தொழிற்சங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செவ்வாயன்று (20.11.2018) காலை காவகுளம் கிராமத்தில் உப்பள தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூடியது.

நிர்வாக தரப்பில் பங்கேற்ற மேலாண்மை இயக்குநர் பேசியதன் சாராம்சம் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 20 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 20நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் புதன் (21.11.2018) முதல் பணிக்கு திரும்ப உள்ளார்கள். 20 நாட்களாக உறுதியோடு போராடி வந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சிஐடியு சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.