===பெ.சண்முகம்===                                                                                                                                                            ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் காவிரியில் தண்ணீர் வந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமான விவசாயம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டாவது நல்ல மகசூல் கிடைக்கும். கஷ்டங்கள் தீரும் என்று நம்பியிருந்த மக்களை கஜா புயல் நிர்மூலமாக்கி விட்டது. ஆம்! உண்மையில் கிராமங்கள் நிலை குலைந்து போயுள்ளன.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்க்கவும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும் நவம்பர் 19ந் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்களுக்குட்பட்ட 15க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சென்றிருந்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் அந்தப் பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன்.

மனித உயிரிழப்புகள் குறைவு என்பதைத் தவிர சுனாமியை விட மோசமான பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் மக்கள் சொன்னது, புயலுக்குப் பிறகு முதன்முதலாக நீங்கள் தான் எங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதுதான்.

அறிவுரை சொன்னது தான் அரசு செய்த வேலை
தமிழக அரசு, ஏராளமான ஆய்வுக்கூட்டங்கள், அதிகாரிகளின் கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் திட்டமிடல் கூட்டங்கள் என்று புயலுக்கு முன்பு கணக்கில்லா செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருந்ததை நாமறிவோம். புயலை எதிர்கொள்ள புயலை விட வேகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால், புயலுக்குப் பிறகு பார்த்தால் தான் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க எந்தவொரு முன் நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பதை நேரில் அறிந்தோம். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது நிவாரண முகாம் அமைப்பதற்கான கட்டிடங்களை அடையாளங்கண்டது, அதற்கான பொறுப்பாளர்களை தீர்மானித்து, கடற்கரையோரம் இருந்த மக்களை முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தியது என்பதைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை.

எதுவும் தயார் நிலையில் இல்லை
ஏற்கனவே, பல்வேறு புயல் தாக்குதல்களால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது அரசுக்கு தெரியாததல்ல! ஆனால், புயல் வரும் என்பதை அரசே நம்பவில்லையோ என்றே இப்போது தோன்றுகிறது. ஏனென்றால், புயல் தாக்கினால் மரங்கள் வேரோடு சாயும், மின்கம்பங்கள் முறிந்து விழும், வீடுகளின் கூரைகளை தூக்கிச் செல்லும், குடிசை வீடுகள் இடியும் என்பதெல்லாம் பல புயல்களில் பார்த்து அறிந்துள்ளது தான்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் குடிதண்ணீர் விநியோகம் செய்ய முடியாது, பால் கிடைக்காது, வெளிச்சத்திற்கு வழியிருக்காது என்று எதிர்பார்த்து அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதுவும் தயார் நிலையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை! இப்போதும் அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் உண்மை நிலைமைகளை மூடி மறைக்கவே முயற்சிப்பது எந்த விதத்திலும் மக்களை பாதுகாக்க உதவாது. இயற்கையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்ற முறையில் தான் அரசின் ஒட்டு மொத்த கவனமும் இருக்க வேண்டும்.
பிரதான சாலைகளில் விழுந்த மரங்களை மட்டும் சாலை ஓரமாக ஒதுக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்திருக்கிறார்கள். பிரதான நகரங்கள், சாலைகளில் மின் இணைப்பு என்பது ஓரளவு கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு காலையும், மாலையும் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இதைத்தவிர வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

தயார்நிலை என்றால் என்ன?
ஜெனரேட்டர் ஏற்பாடு செய்வது, பொக்லைன் இயந்திரங்களை முன்கூட்டியே கொண்டு வந்து நிறுத்துவது, புதிய மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கொண்டு வருவது, குடிதண்ணீர் கேன்களை சேகரித்து வைத்திருப்பது, மெழுகுவர்த்தி, அவசர நிலை விளக்கு, அரிக்கேன் விளக்கு, மண்ணெண்ணெய், தீப்பெட்டி, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட், குழந்தைகளுக்கான உணவு பண்டங்கள், பால் பவுடர்கள், பாய்கள், தார்ப்பாலின், உடைகள், மருந்து பொருட்கள் என இவற்றையெல்லாம் செய்திருந்தால் தான் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் மேலே குறிப்பிட்ட எதுவுமே மக்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை என்பதை நேரில் கேட்டறிந்தோம்.

‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” என்ற குறளுக்கேட்பத்தான் அரசு கையைப் பிசைந்து கொண்டு எதுவும் செய்ய இயலா நிலையில் நிற்பதை பார்த்தோம். அநேகமாக கஜா புயல் தாக்கிய திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இது தான் நிலைமை.

கடந்த காலங்களில் புயல், வெள்ளம் பாதிக்கிற போது உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்முயற்சி எடுத்து மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவார்கள். அதிகாரிகளின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்வார்கள். இப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் முன்முயற்சி எடுக்கவே ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசே பொறுப்பாகும்.

வாழ்வாதாரம் அடியோடு நாசம்
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்போ சொல்லிமாளாது. வேதாரண்யம் பகுதியில் சவுக்கு, முந்திரி அதிகம். அவை முற்றிலும் அழிந்துவிட்டது. கதிர் வந்த நெற்பயிர்கள் இனி விளைச்சல் தராது. தென்னை மரங்கள், வாழை, மக்காச்சோளம் மற்றும் மா, பலா, தேக்கு என நீண்டகால மரப்பயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நாசமாக்கிவிட்டது புயல்.

ஆடுகள், மாடுகள், கோழிகள் என விவசாயத்திற்கு அடுத்தபடியாக அம்மக்களின் ஆதாரமாக இருந்தவை ஆயிரக்கணக்கில் மாண்டுவிட்டன. அந்தக் குடும்பங்கள் இந்த இழப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமல்ல. ஏராளமான சிறு வியாபாரிகள் தங்களது கைமுதலை இழந்து தவித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தங்கள் வாழ்நாள் உழைப்பு முழுவதையும் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போலத்தான் உள்ளது.

அரசு உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
குடிதண்ணீர், மின்சாரம், மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அள்ளுவது, நீர்நிலைகளை சுத்தப்படுத்துவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற அடுக்கடுக்கான பணிகளை அரசு ஏக காலத்தில் செய்ய வேண்டும். புயல் பாதிக்காத மாவட்டங்களிலிருந்து வருவாய்த்துறை, மின்சாரத்துறை, குடிநீர் – வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, தூய்மைப்பணியாளர்களை ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து ஒரு சில நாட்களில் மேற்கண்ட பணிகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். காலம் கடத்துவது, நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிவாரணத் தொகைகளை அதிகப்படுத்தி வழங்குவதுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். குடிசை வீடுகளுக்கு மாற்றாக, சிறப்பு திட்டத்தின் கீழ் தரமான கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க திட்டமிட வேண்டும்.

பள்ளி குழந்தைகளின் சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள் புதிதாக வழங்க வேண்டும். காவல்துறையை ஏவி பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் அரசு நிற்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமையாகும். நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கச் செய்வதும் தான் தீர்வை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

பொதுச்செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.