குளிர் ஊட்டப்பட்ட அறையில் அந்தப் படத்தை பார்த்துவிட்டு மரங்களடர்ந்த சாலையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் நினைவின் இடுக்குகளில் ஒளிந்து கொண்ட கவிதையை தேடும் படலம் தொடங்கி விட்டது.
அண்ணா சாலையின் குறுக்கில் மல்லாக்கா விழுந்து கிடக்கும் ஜெமினி பாலத்தை கடக்கையில் அகப்பட்டு விட்டது. ஆம், அது கவிஞர் குட்டி ரேவதி எழுதிய “ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’  நூலில் குறிப்பிட்டது.
அந்த கவிதை இதுதான்..
நிழல் மரங்களற்றுச்
சூரியன் தவிதவித்திடும் நெடுஞ்சாலையோரம்
வெயிலை உதறி எறிந்தவாறு
நடக்கிறாள் மூதாட்டி
குதிக்கால்களால்
நெடுங்களைப்பை நசுக்கித் தேய்த்தவாறு
காற்றைப்பின் தள்ளிக் கைகளை வீசுகிறாள்
வெய்யில்
மிகப்பெரும் தண்டனையை
வழி நீளப்பரவ விட்டுள்ளது
வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கித் துடிக்கிறது
ஆதி முதல் அவளைத் தொடரும் துயர்
ஃபஹீமா ஜஹானின் ‘ஆதித்துயர்” தலைப்பிட்ட இக்கவிதையின் மையப்புள்ளியை களமாக கொண்டே அந்த ஆவணப் படம் உருவெடுத்ததோ எனத் தோன்றியது. ஆம், வேட்டை நாய் போல அவள் முன்னே ஓடிச் செல்கிற நிழலை வெளிச்சம் போட்டு சமூகத்தின் முன்பு வைத்துள்ளார் இயக்குனர் வைஷ்ணவி சுந்தர் தனது “ஆனா, அன்று அவள் என்ன உடுத்தியிருந்தா” (BUT what was she wearing”) படத்தில்.
“1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத் தண்டிப்பதற்குக் குற்றவியல் சட்டங்கள் வழிவகுத்தன. அதற்கு அப்பாற்பட்டு பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களைத் தடுப்பதைப் பற்றி நம்முடைய நீதித் துறை போதுமான கவனம் செலுத்தியிருக்கவில்லை.
குறிப்பாக, வேலைக்குச் செல்லுமிடத்தில் பெண்கள் மீது ஏதேனும் கிரிமினல் குற்றங்கள் இழைக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் காவல் துறை உதவியை நாட முடியும். ஒருவேளை மேலதிகாரிகளோ, சக ஊழியா்களோ பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் அன்று இடமில்லை. மேலும், பாலியல் சீண்டல் அல்லது தொந்தரவு என்றால் என்ன என்பதற்குச் சரியான வியாக்கியானமும் இல்லாமலிருந்தது.” என்பார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு.
இத்தகைய குறைபாடுகளை போக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் நிர்ப்பந்தங்கள் காரணமாக பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை 2013ல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இப்படி ஒரு சட்டம் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்தது விசாகா (எதிர்) ராஜஸ்தான் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி உருவெடுத்து ஒரு சட்டம் நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதை 17 துணை தலைப்புகளில் அலசுகிறது இவ் ஆவணப்படம். பல்துறை சார்ந்த பெண்கள் தாங்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளை சவால்களை காத்திரமான சொற்களில் முன்வைத்து உரையாடலை கொண்டு செல்கின்றனர். 5 ஆண்கள் உள்ளிட்டு 27 பெண்கள் தத்தமது மொழியில் பேசியுள்ளனர். பல்வேறுப்பட்ட முகங்கள் மொழிகள் ஆனால் அதன் அடிநாதம் ஆணாதிக்கத்திற்கு எதிராகவே உள்ளது.
“நோயை விட்டுவிட்டு அறிகுறிகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதுதான் நமது வழக்கம். நான் அதை மாற்ற நினைத்தேன் அவ்வளவுதான். பணியிடத்தில், வீட்டில், சாலையில் என எங்கு பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் நடந்தாலும் அவை வெறும் அறிகுறிகள்தான். மொத்த அவலங்களுக்கும் பின்னால் செயல்படுவது ஆண்மையவாதம். ஆணாதிக்கம்தான். பெண் மீதான வன்முறைகளின் மையப்புள்ளி. என் படம் அதைத்தான் செய்கிறது. மதங்களை, சாதிகளை, ஆண்மையவாதத்தை, மன வக்கிரங்களைக் கேள்வி கேட்பதுதான் இப்படத்தின் நோக்கம்” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் வைஷ்ணவி.
கட்டுமான தொழிலாளி முதல் கார்ப்பரேட் அதிகாரி வரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும்  தாங்கள் பெண்களாக இருப்பதை தவிர எந்த தவறும் இழைக்கவில்லை. ஆனால் சக ஆண் ஊழியர்களின் பாலியல் சீண்டலை எதிர்த்தவுடன் எதிர் கொள்ளும் இன்னல்களோ ஏராளம்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக துறையில் பணியாற்றிய பெண்ஊழியர் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக தான் நடத்திய சட்டப் போராட்டத்தை விவரிப்பதை அவசியம் ஆண்கள் உள்வாங்கவேண்டும்.
“நான் ‘வேண்டாம்’னு சொல்றது என்னோட கடமையல்ல, அதனால நீ  ‘வேண்டும்’ என்பதாக ஏற்றுக்கொள்ள கூடாது” என நறுக்கென ஆங்கிலத்தில் பெண் ஒருவர் பேசுவது நாகரிக சமூகமாக நம்மை மேம்படுத்தி கொள்ள வழிகாட்டும் வாக்கியங்கள்.
அருணாசல பிரதேசத்தை சார்ந்த இளம் பெண்ணின் பேச்சு வடகிழக்கு மாநிலங்களின் பெண்கள் குறித்த ‘அகண்ட பாரத தேசத்தின்’ புரிதல்களை வெற்று கூச்சல்களை எள்ளி நகையாடுகிறது.
மிக இயல்பாக,  உரிமையாக, கடமையாக, ஆண்மைய சமூகம் பெண்ணை கையாள கட்டமைத்துள்ள  சமூகஅமைப்பு,  ‘ஆண்மை’ என்ற பெயரில் ஆணாதிக்கத்தை  ஆண்களை தூக்கி சுமக்க வைக்கிறது. அது எப்படி ஆண்களின் செயல்பாடுகளை முடக்கி தனிநபர்க்கும் சமூகத்திற்கும் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக பேசுகிறது.
திராவிட இயக்கங்கள் குறிப்பாக திமுக பெண்களுக்கான சில திட்டங்களை அமைத்திருந்தாலும் அவைகள் சமூகநலத்திட்டங்களாக இருந்தனவே தவிர பெண்கள் மீது திட்டமிட்டு ஏவப்படும் வன்முறை களை தடுக்க அரசியல் ரீதியாக இடையீடு செய்யாதால்  சமூகநல அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்பாராக பெண்கள் மாற வில்லை” என பேராசிரியர் ஆனந்தியின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியது.
ஐனநாயக மாதர் சங்கம் தலையிட்ட பலதரப்பட்ட பெண்களின் பிரச்சனைகளை, வழுக்குகளை களஅனுபவத்திலிருந்து பேசியுள்ள பொதுசெயலாளர் சுகந்தி  சட்டத்தின் குறைபாடுகளை போதாமையை மட்டுமல்ல எதை நோக்கி சமூகத்தை இயக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காண்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களைகுற்றவாளியாக்கி அவமானப்படுத்தி சாடும் போக்கு இயல்பாகவே பொதுபுத்தியில் உறைந்திருக்கிறது. அதுதான் “நீ அன்னைக்கு என்ன டிரஸ் போட்டிருந்த”, “நீ இடம் கொடுக்கலனா அது நடக்குமா”, “அப்ப நீ வேலைக்கு போக வேண்டாம்.” இதுபோன்ற வார்த்தைகள் நமது வாய்க்குள்ளிருந்து வந்து விழுகிறது.இத்தகைய போக்குகளை  கூர்மையான விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது இப்படத்தின் உரையாடல்கள்.
பல்துறை சார்ந்தவர்களை  சமமாக கையாண்ட ஒளிப்பதிவு, நடன அசைவுகள் மூலம் பேச்சின் சாரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள்,  பெண்ணடிமைக்கு காரணமான இந்திய கருத்தியலை நுட்பமாக வெளிப்படுத்தும் திரைமொழி ஆகியன ஆவணப்படத்தின் தரத்திற்கு சாட்சியாய் உள்ளது.
குற்றவாளி கூண்டில் ‘தனி ஒருவரை’ நிறுத்தாமல் ஆணாதிக்கத்தின் அடிப்படை கருத்தியலை, சித்தாந்தத்தை, சிந்தனையோட்டத்தை எதிர்த்து உரையாடலை நகர்த்துவதில் இப்படம் வெற்றியடைந்துள்ளது.
தனிநபர்களை, குழுவாக செயல்படுவோரை, இயக்கமாக இயங்குவோர்களை பண்படுத்தி பயிற்றுவிக்க இப்படத்தை காண்பதும் உரையாடுவதும் அவசியம்.

Leave a Reply

You must be logged in to post a comment.