வேலூர்,
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 33கோடி மதிப்பில் வேலூர் கோட்டையை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, மத்திய தொல்லியல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் வேலூர் கோட்டையை சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி)திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சி இணைக்கப்பட்டு ரூ.987 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரூ. 33 கோடி மதிப்பில்வேலூர் கோட்டையை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, வேலூர் கோட்டையிலுள்ள பழங்கால கட்டடங்களை அவற்றின் பழைமை மாறாமல் சீர்படுத்தவும், சிப்பாய் புரட்சி நடந்த வரலாற்றை விளக்கும் வகையில் எல்இடி தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளி அமைப்புடன் காட்சி அரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளன. மேலும், கோட்டைக்கு வெளியே உள்ள மைதானத்தைச் சீரமைத்து பூங்காவாக மாற்றப்படவும் உள்ளது. இதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதத்துக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தொல்லியல் துறையின் சென்னை மண்டலக் கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், மாநகராட்சிஆணையர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வேலூர்கோட்டையை சனிக்கிழமைஆய்வு செய்தனர். அப்போது, ஜலகண்டேஸ்வரர் கோயில், கண்டி மஹால், அருங்காட்சியகம் உள்ளிட்ட கோட்டை வளாகத்திலுள்ள பல்வேறு கட்டடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.பின்னர், செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம்,“ 3 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக அடிப்படை வசதிகளாக கழிப்பறைகள், பூங்காக்கள் போன்றவை அமைக்கப்படும். இரண்டாவது கட்டமாக ஒப்பந்தம்பெற்று சிதிலமடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும். மூன்றாம் கட்டமாக புதிதாகசெயல்படுத்த வேண்டியபணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், வேலூர் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.