வியாழக்கிழமை காலை, தஞ்சாவூர் மாவட்டம், அணைக்காடு கிராமத்தில் 7ம் வகுப்பு மாணவி வயதுக்கு வருகிறாள்.

தீட்டு காரணமாக அவள் வீட்டிற்குள் வரக்கூடாதென அருகில் உள்ள குடிசையில் தனியாக தங்க வைக்கப்பட்டாள்.

தென்னைமரத் தோப்பில் அருகில் வீடுகளே இல்லாத கருப்பு போர்வையாய் இருள் சூழ்ந்த 2 மணி நள்ளிரவில் புயல் தன் பேயாட்டத்தை காட்ட தொடங்கியபோது குடிசைக்குள் மிரண்டு போகிறாளவள்……

மரங்கள் ஒவ்வொன்றாய் ஆங்காங்கே பேரிடியாய் விழும் சத்தம் மரணபயத்தை கொடுக்க கத்துகிறாள், கதறுகிறாள், அவள் அலறல் குடிசையில் அவளுக்கு மட்டுமே கேட்கிறது.

வெளியே ஓடிவந்து அப்பா,அம்மாவிடம் வரலாம் என்றால் வாயிப்பில்லை.

அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து குடிசை மீது விழுந்ததில் அவள் நெஞ்சில் விழுந்து அலறலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மூச்சடைத்து செத்துப்போனவளின் கடைசிக்குரல் யாருக்கும் கேட்கவில்லை.

காலையில் பார்த்தபோது மகள் பிணமாய் கிடக்கிறாள்…..அவள் மட்டுமல்ல ஏராளமான தென்னை மரங்களும் தான்.

கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை அகற்றி மகளை அலங்கோலமாய் எடுக்கிறார்கள்….

சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழியில்லை சுற்றிலும் மரங்கள்.

என்ன செய்ய சுமார் 20 மணிநேரம் கழித்து தோளில் சுமந்து கொண்டு செல்லப்பட்டாள்.

பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்கு கொண்டுவர மீண்டும் 18 மணிநேரம் ஆனது.

இதைக்கேள்விப்பட்ட நாங்கள் 5 கிமீ நடந்து மரக்குவியல்களை கடந்து சென்று பார்த்தபோது ………

அவள் உடலை சுற்றி மொத்தமே 10 பேர் மட்டும். அவள் அம்மா கால் ஒடிந்து மருத்துவமனையில்….

அப்பா என்ன செய்வதென புரியாமல் பித்துப்பிடித்தபிடி ஓரமாய்…

வார்த்தைகள் இல்லை,வலிகள் ஆயிரம்….

இதை செய்தியாய் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எங்களால் முடிந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டுத் திரும்பியபோது…..

அவள் அலறல் தோப்பெங்கும் ஒலிக்கிறது!!!!

– ஒரு பத்திரிகை நண்பரின் பதிவு

 

Leave A Reply

%d bloggers like this: