தமிழகத்தில் கஜா புயலால் நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. 46 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் அடியோடு சாய்ந்திருக்கின்றன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் கடுமையான சேதமடைந்திருக்கின்றன. கஜா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்கூட்டியே அறிவித்த தமிழக அரசு, ஆனால் அதற்கேற்றவாறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன் ஏற்பாடுகளை செய்யாமல் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களின் கிராமப்புறங்களில் எங்கு திரும்பினாலும் நாங்கள் சாப்பிட்டு நாளாகிறது, தண்ணி இல்லை… குழந்தைகளுக்கு காய்ச்சல்.. பால் இல்லை.. கரண்ட் இல்லை.. என்றகூக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் தமிழக அமைச்சர்கள் கூறும் மீட்பு நடவடிக்கைகள் ஊடகங்களில் மட்டுமே நடக்கிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்டிருக்கும் 90 சதவிகிதமான கிராமப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை. பகலில் கூட ஓரளவு தற்காத்துக்கொள்ளும் மக்கள், இரவு நேரங்களில் கடும் குளிரில் மின்சாரமின்றி படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக கஜா புயல் கரையை கடந்த வேதாரண்யம் பகுதி முற்றிலும் உருக்குலைந்து, தனித்தீவாக மாறியிருக்கிறது. நாகை, திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகளுக்கு இதுவரை அதிகாரிகள் யாரும் செல்லவே இல்லை. போதிய மீட்பு நடவடிக்கைக்கான திட்டமிடல் இல்லாத நிலையால் மக்கள் மேலும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். வேதாரண்யம் போன்ற பகுதிகளில் ஒரு தண்ணீர் கேன் ரூ. 250, ஒரு லிட்டர் பால் ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்கும் அவலநிலை பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு துயரங்கள் அரங்கேறும் நிலையிலும் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்கூற கூட மனம் இரங்கவில்லையே! பாதிக்கப்பட்டமக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட வேறு என்ன முக்கியப்பணி ஒரு முதல்வருக்கு இருந்திட முடியும்? மக்கள் தங்கள் உடமைகளை மட்டும் இழக்கவில்லை. வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகள், விளைபயிர்கள், தென்னை, வாழை, மா என அனைத்தையும் இழந்து இருக்கின்றனர். போக்குவரத்து- தொலைத்தொடர்பு, மின்சாரம் என முற்றிலும் இழந்த நிலையில் இருக்கும் மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்திட வேண்டும். மத்திய அரசு உடனே பேரிடர் ஆய்வுக்குழுவை அனுப்பி மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிட வேண்டும். போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கி மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வகை செய்ய வேண்டும். அரசு மட்டுமின்றி அனைத்து பகுதி மக்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முன் வரவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.