நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நவம்பர் 19 திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஏ.வி.முருகையன், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி உள்ளிட்டோர் சென்றனர்.

எதுவும் தப்பவில்லை
தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட அய்யூர், தொழுதூர், தேத்தாகுடி, வேதாரண்யம் ஒன்றியத்திற்குட்பட்ட மூலக்கரை, பிராந்தியக்கரை,தகட்டூர், வாய்மேடு, பஞ்ச நதிக்குளம், ஆயாக்காரன்புலம் ஆகிய பகுதிகளை தலைவர்கள் பார்வையிட்டனர்.

“அந்தப்பகுதிகளை பார்க்கும் போது விமான தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைப்போல் மிக மோசமாக காட்சியளித்தன. இந்த கஜா புயலுக்கு கான்கிரீட் தளம் போட்ட வீடுகளைத் தவிர ஓடுகள், கூரைகள், சிமெண்ட் சீட் போட்ட எந்தவீடும் தப்பவில்லை.” என கே.பாலகிருஷ்ணன், பின்னர் தெரிவித்தார்.

“முகாம்களில் 1500 பேர்களுக்கு மேல் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு குடிதண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. நகராட்சி சார்பில் வந்துள்ள குடிதண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க 1000க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்கிறார்கள். தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் மின்சாரம் இல்லை என்பதால் இரவு நேரங்களில் அனைவரும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஜெனரேட்டர் தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

கூரை வீடு, ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் போட்ட வீடுகள் அத்தனை மீதும் தென்னை மற்றும் இதர மரங்கள் விழுந்து கிடப்பதால் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சவுக்குத்தோப்பு முழுமையாக அழிந்து போயிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போயிருக்கிறது.” என கள நிலவரத்தை கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் விளக்கியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்க முடியும். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாத காரணத்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரணப்பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மீட்பு – நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துக!
எனவே, மாநில அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு போன்றவை சீரமைக்கப்பட வேண்டும், உடனடியாக மக்களுக்கு குடிதண்ணீர், பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.