===இல.முருகேசன்===
ஹைதர் அலியை சிங்கம் என்றும் அவரது மகன் திப்பு சுல்தானை புலி என்றும் வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். சிங்கத்திற்கு(ஹைதர்) சிங்கம் தான் பிறக்கும்; ஆனால் புலி (திப்பு) பிறந்ததாக கூறுவார்கள்.

1750ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தேவனஹள்ளியில் ஹைதருக்கும் – வாதிமா என்ற பாகர் உன்னிசாவுக்கும் மகனாக திப்பு பிறந்தார். திப்புசுல்தானின் தம்பி கரீம். திப்புவை இறைப் பணிக்கும், கரீமை ஆட்சிப் பணிக்கும் அனுப்ப ஹைதர் முடிவு செய்தார். கரீமுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக இறந்த காரணத்தால் திப்பு ஆட்சிப் பணிக்கு வர நேர்ந்தது.
இந்திய வரலாற்றில் வெள்ளையர்களை நடுநடுங்க வைத்த ஒரு இஸ்லாமிய மன்னன் உண்டென்றால் அது திப்பு தான்.

முதல் சுதேசி மன்னர்
இந்திய வரலாற்றில் 4 மைசூர் போர்கள் நடந்துள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மன்னர்களும் சரணடைந்த நிலையில் இறுதி மூச்சுவரை நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுப்பதற்காக தீரத்துடன் போராடி மடிந்தவர் திப்பு. கர்நாடகத்தை ஆண்ட திப்பு தேசம் முழுவதிலும் வெள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று போராடி மடிந்த முதல் இந்திய சுதேசி மன்னராவார்.

ஏவுகணை நுட்பத்தின் முன்னோடி
வெள்ளையருக்கு எதிரான 2ஆம் மைசூர் போரில் ஹைதர்அலி வெற்றி கண்டார். இந்த வெற்றிக்கு தந்தைக்கு உறுதுணையாக இருந்தவர் திப்பு. தந்தையின் மரணத்திற்கு பிறகு 1782ல் தனது 32 வயதில் திப்பு, சுல்தானாக அரியணை ஏறுகிறார். பிரிட்டிஷ் சர்க்காரை விட ஒரு மேலான ராணுவத்தை வைத்திருந்த திப்பு, இந்திய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தையாக கருதப்படக் கூடியவர். கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் என்று லண்டன் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவர் திப்புசுல்தான்.

அப்படிப்பட்ட திப்புவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஆதிக்க வெறி பிடித்த வெள்ளை அரசு திட்டம் தீட்டியது. சூழ்ச்சிகளை அரங்கேற்றியது.இதை எதிர்கொள்ளவும், பிரிட்டிஷாரை எதிர்க்கவும் மராட்டிய இந்து மன்னர் மற்றும் சுற்றியுள்ள குறுநில இந்து மன்னர்களிடமும், இஸ்லாமிய மன்னர்களான ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம், டில்லி பாதுஷா ஆகியோரிடமும் வெள்ளையருக்கு எதிராக பரந்துபட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று திப்பு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த மன்னர்கள் பிரிட்டிசாரிடம் விலை போனதால் திப்புவின் முயற்சி பலிக்கவில்லை. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இந்த நாடு பிரிட்டிசாரிடம் அடிமைப்பட்டிருக்காது என்று திப்புவை பற்றி மகாத்மா காந்தி நினைவுகூர்கிறார்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உலகளாவிய நட்பு கொண்டிருந்தவர் திப்பு. பிரஞ்சு அரசின் லூயி மன்னனுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். மேற்கு கடற்கரை ஓரங்களில் பிரிட்டிஷ் படையை துரத்த பிரெஞ்சு படையுடன் கைகோர்த்து செயல்பட்டார். ஆனால் பிரெஞ்சு மன்னர் 16ம் லூயியுடன் பிரிட்டன் உடன்பாடு கண்டதால் பிரெஞ்சு அரசு திப்புவை கைவிட்டது. இருந்தாலும் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் படையினர் முழுமையாக காலூன்ற முடியாமல் தவித்தது. அதற்கு காரணம் திப்பு தான். தமிழகத்தில் விடுதலை வேட்கையுடன் போராடிய வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன்சின்னமலை, கோபால் நாயக்கர், கட்டபொம்மன் உள்ளிட்ட குறுநில மன்னர்களுடனும் திப்பு நட்புறவு கொண்டிருந்தார்.

முற்போக்கு எண்ணம் கொண்ட மன்னன்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மலபார் பகுதியில் சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. இது பற்றி கேள்விப்பட்ட திப்புசுல்தான் தனது ஆட்சியின் கீழ் இருந்த கவர்னருக்கு கடிதம் எழுதினார். மார்பை மறைக்காமல் பெண்கள் நடமாடுவது நீதிக்கு புறம்பானது; இந்த வழக்கத்திற்கு ஏழ்மை தான் காரணம் எனில் அதனை களையுங்கள்; ஏதாவது தண்டனை என்றால் அதனை நீக்குங்கள் என்று எழுதினார். அந்த இனத்தைச் சேர்ந்த ஆண்களிடம் பேசுங்கள்; தனது தாயும், சகோதரிகளும் மேலாடையின்றி நடமாட அனுமதிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என அறிவுறுத்தினார் திப்பு. இதே போல் தேவதாசி முறைக்கு முடிவுகட்ட முயற்சித்தார்.

பூரி ஜகநாதர் ஆலய தேர் சக்கரத்தில் விழுந்து மடிந்தால் ஆத்மா சொர்க்கத்திற்கு போகும் என்று இந்து மக்கள் மூட நம்பிக்கையில் இருந்தனர். இதனால் தேரோட்டத்தின் போது பல லட்சக்கணக்கான இந்துக்கள் தேர்ச்சக்கரத்தில் விழுந்து இறந்து வந்த நிலையில் திப்பு இந்த சம்பவத்தை கண்டித்தார். இது போன்ற இந்து மத மூட நம்பிக்கையில் திப்பு தலையிட்டது இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இதனை பிரிட்டிஷ் ஜெனரல் காரன்வாலிஸ் சாதகமாக பயன்படுத்திக்கொண்டான்.

சிருங்கேரி மடத்திற்கு பாதுகாப்பு
1789ல் திப்புசுல்தான் திருவிதாங்கூரை ஆக்கிரமிக்க முயற்சித்ததாகக் கூறி மைசூர் மீது போர்தொடுக்க திருவிதாங்கூர் மன்னரை திப்புவுக்கு எதிராக காரன்வாலிஸ் திருப்பினார். மராட்டிய இந்து மன்னனையும் தூண்டிவிட்டார். இதனையடுத்து மராட்டிய படை சீரங்கப்பட்டிணம் மீது படையெடுத்தது. அந்த படையை திப்புவின் மைசூர் படை முறியடித்தது. போரில் தோற்று பின்வாங்கிய மராட்டிய இந்து மன்னரின் படை சிருங்கேரி மடத்திற்குள் புகுந்து கொள்ளையடித்தது. சாரதா பீடத்தை சேசதப்படுத்தியது. இது பற்றி கேள்விப்பட்ட திப்பு, சேதமான சிலையை மறு உருவாக்கம் செய்து கொடுத்ததோடு மடத்திற்கு பாதுகாப்புக்காக சையத் முகமது என்ற தளபதி தலைமையில் ஒருபடையை அனுப்பி வைத்தவர் திப்பு.

பின்னர், ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னனின் படையும், ஆற்காடு நவாப் படையும், தொண்டைமான் படையும் பிரிட்டிஷ் தளபதியான காரன்வாலிஸ் படையுடன் சேர்ந்து கொண்டு திப்புவை எதிர்த்து போரிட்டன. சீரங்கப்பட்டிணத்தை சுற்றி பிரிட்டிஷ் படைகள் முற்றுகையிட்டாலும் 30 நாட்களாக நெருங்க முடியவில்லை. திப்பு சுல்தானின் போர் உத்தியைக் கண்டு பிரிட்டிஷ் படை நடுநடுங்கிப் போனது. இதைத்தான் கிழக்கிந்திய கம்பெனியின் குலைநடுக்கம் என்று திப்புவை அன்றைக்கு லண்டன் பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

காரன்வாலிசின் நயவஞ்சகம்
இந்நிலையில், திப்புவை பற்றி கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு தாமஸ் மன்றோ கடிதம் எழுதினார். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதல் அபாயம் திப்பு தான் என்றார். திப்பு எதற்கும் கலங்காமல் தொடர்ந்து போர் புரிந்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரின் இறுதியில் திப்பு தோல்வியடைந்தார். இந்த தோல்வியை அடுத்து சீரங்கப்பட்டிணத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின்படி திப்புவின் கட்டுப்பாட்டில் பாதி ராஜ்ஜியத்தை எதிரிகளான பிரிட்டிசாருக்கும், நிஜாம் அரசுக்கும், மராட்டிய அரசுக்கும் கொடுக்க நேர்ந்தது. மேலும் இழப்பீட்டு தொகையாக ரூ.3.3 கோடியை ஓராண்டுக்குள் கொடுக்க வேண்டும் என்றும் அதுவரை பணயப் பொருளை போல திப்புவின் 10 வயது மகன் அப்துல் காலித் சுல்தானையும், 8வயது மகன் மொய்தீன் சுல்தானையும் பிரிட்டிஷ் தளபதி காரன்வாலிஸ் இழுத்துச் சென்றான்.

தனது ராஜ்ஜியம் நிலை குலைந்த நிலையில் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு இரண்டு குழந்தைகளையும் பணயக் கைதிகளாக அனுப்பிய அந்த சோக சம்பவம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக கருதப்படுகிறது. ஈவிரக்கமற்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது மட்டுமல்ல; இத்தகைய கொடூரச் செயலுக்கு மராட்டியத்தை ஆண்ட இந்து மன்னர்களும், இஸ்லாமிய மன்னர்களான ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாம் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.

காரன்வாலிஸ் திப்புவின் குழந்தைகளை பணய கைதிகளாக இழுத்துச் சென்ற சம்பவத்தைக் குறிக்கும் விதத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் சிலை வடிக்கப்பட்டது. அந்த சிலை சென்னை மாநகரில் நிறுவப்பட்டது. அந்த சிலைக்கு சென்னை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு புனித ஜார்ஜ் கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டது. 3வது மைசூர் போருக்கு பிறகு உள்நாட்டு வணிகத்தை தன்னிறைவு அடையச் செய்தார் திப்பு. தனது இரண்டு மகன்களையும் மீட்டதோடு தனது படையை முன்பை விட பலம் வாய்ந்ததாக மாற்றினார். எப்படியேனும் இந்த மண்ணில் இருந்து வெள்ளையரை விரட்ட வேண்டும் என்றும்; அதுவரை நான் பஞ்சணையில் உறங்கமாட்டேன் என்றும் திப்பு தீர்க்கமாக இருந்தார்.

திப்புவைக் கண்டு அஞ்சிய வெல்லெஸ்லி
4வது மைசூர் போர் துவங்கிய போது பிரிட்டிஷ் அரசுக்கு ரிச்சர்டு வெல்லெஸ்லி பிரவு கடிதம் எழுதினார். “அவனைக் கண்டு நான் அஞ்சுகிறேன். இந்திய மன்னர்கள் மத்தியில் அவன் ஏற்படுத்தும் முன்னுதாரணம் நமக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆனால் அவனுக்கு ஒத்துழைக்க தைரியம் இல்லாத கோழைகளாக இந்திய மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டமே” என்று திப்புவைப் பற்றி தமது கடிதத்தில் விவரித்தார் வெல்லெஸ்லி. திப்புவுடன் போரிட்டு வெல்ல முடியாது; அதனால் லஞ்சம் கொடுத்து திப்புவின் நம்பிக்கைக்கு உரியவர்களை விலை பேசி பின் போர்தொடுக்கலாம் என்றும் எழுதினார். அதன்படி திப்புவின் பிரதம அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும், தளபதிகளும் அதற்கு பலியானார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். துரோகப் பின்னணியிலேதான் திப்புவை வெல்ல முடிந்தது.

3வது மைசூர் போரில் பிரிட்டிசாருடன் சேர்ந்து திப்புவுடன் போரிட்ட அதே மன்னர்கள் 4வது போரிலும் போரிட்டனர். மராட்டிய மன்னர்கள் மட்டும் இதில் விலகிக்கொண்டனர்.
போர்க்களத்தில் தாக்குண்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோதும், நாம் சரணடையக்கூடாது; ஆடுகளாக 200 ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக 2 நாள் வாழ்ந்தால் போதும் என்று கூறிவிட்டு மரணித்தார் திப்பு.

காவிக்கூட்டத்தின் கயமை
இத்தகைய மகத்தான வரலாறு படைத்த திப்புவைத் தான் மதவெறியராக, கோவில்களை இடித்தவராக சித்தரிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. கர்நாடகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் திப்பு ஜெயந்தியை கொண்டாட சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முயன்றது. குடகு மாவட்டத்தில் திப்பு ஜெயந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் கலவரத்தை தூண்டினர். இதன் காரணமாக 2 பேர் கொல்லப்பட்டனர். இதனை காரணம் காட்டி மஞ்சுநாத் என்பவர் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திப்பு ஜெயந்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு, திப்பு சுல்தான் ஒரு அரசரே தவிர சுதந்திர போராட்ட வீரர் அல்ல என்றும், அவருக்கு ஜெயந்தி விழாவை ஏன் அரசு நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியது. இந்த தேசத்தை 200 ஆண்டு காலம் அடக்கி ஆண்ட வெள்ளையரையும், கிழக்கிந்திய கம்பெனியையும் எதிர்த்த அனைவரும் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற ஞானம் அந்த அமர்வுக்கு இல்லாமல் போனது.

திப்புவை பற்றி மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் எழுதும் போது, “ மதவெறியின் மூலம் வரலாற்று நாயகர்களை களங்கப்படுத்துகிற காலம் இது. திப்பு மதவெறியராக இருந்திருந்தால் சீரங்கப்பட்டிணத்தில் உள்ள ரெங்கநாதர் ஆலையத்தையும் தகர்த்திருப்பார்” என்று எழுதினார்.
மதங்களிடையே நல்லுறவை பேணிக்காக்க வேண்டும் என்பது திருக்குரானின் அறிவுரையாகும். திருக்குரான், பிற மதத்தவரின் நம்பிக்கையை அவமதிப்பதை தடுக்கிறது. மற்ற மதத்தினரை அவமரியாதை செய்யாதீர்கள். அது அல்லாவை அவமதிப்பது போன்றதாகும்.இந்த பிரகடனம் 1787ல் திப்புவால் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனமே, திப்பு மதவெறியரல்ல என்பதற்கு நிரூபணமான சான்றாகும்.

இத்தகைய உண்மைகளை கையில் ஏந்தி, இந்துத்துவா சக்திகளின் பொய்ச் சரடுகளை எதிர்த்து முறியடிக்க இந்துக்கள் சிறுபான்மை மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவது அவசியமாகும்.
கட்டுரையாளர் : தீக்கதிர் திண்டுக்கல் மாவட்ட நிரூபர்

Leave a Reply

You must be logged in to post a comment.