மதுரை நரிமேட்டில் அந்த நள்ளிரவில் காவல்துறையின் ஜீப் ஒன்று ஒளியை உமிழ்ந்து கொண்டு அந்த கூரை வீட்டின் முன்பு வந்து நின்றது.வீட்டிற்குள் ஆறு பேர் படுத்துக் கிடந்தனர். மணவாளன், மாரி, கருப்பையா, கோவிந்தன், முத்தையா, முத்துப்பிள்ளை ஆகியோரே அந்த ஆறுபேர்.

போலீஸ் உளவாளி ஒருவன் போலீசிடம் இவர்தான் மணவாளன் என்றான்.அனந்தராமன் என்ற இன்ஸ்பெக்டர் மணவாளனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.அடுத்து மாரியை அடையாளம் காட்ட பொன்னம்பலம் என்ற போலீஸ்காரன் மாரியை சுட்டான்.இருவரும் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

மற்ற நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துசெல்லப்பட்டனர். மணவாளன் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச்செயலாளர்.1948 முதல் 1951 வரை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்த காலம் அது.1949 நவம்பர் 19 ரகசியக்கூட்டம் நடந்த இடத்தில் தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

மணவாளனின் தந்தை பெயர் தேவர்பிரான்பிள்ளை.தாயார் தேவரம்மாள்.அவருக்கு சவுந்தரவல்லி என்ற மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகளும் உண்டு.அவரின் அப்பா,சித்தப்பா,மாமா ஆகிய மூவரும் தேசியவாதிகள்தான்.உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து, இந்தி மொழி பயின்று பண்டிதரானவர்.தெருப்பாடகன் என்ற பெயரில் பாடல்கள் இயற்றியுள்ளார்.

தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம்,சவுராஷ்டிரா ஆகிய நான்கு மொழிகளில் புலமை பெற்றவர் மணவாளன்.ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளி மதுரை நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று. மணவாளன்-மாரி என்றும் நினைவில் வாழ்கிறார்கள்.

“விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே தோழா தோழா
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம் தோழா ..
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரசித்தி பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் தோழர்.மணவாளன் தான்.

வீரர் உமக்கே வணக்கம் வணக்கம் தோழா.

Surya Xavier

Leave a Reply

You must be logged in to post a comment.