சென்னை,
சேலத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 32 பேரை கைது செய்ததை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. சேலத்தில்ராஜலட்சுமி, தருமபுரியில் சவுமியா என தொடர் கதையாக நீண்டு கொண்டே வருகிறது. இதைக் கண்டித்து சேலத்தில்வாலிபர் சங்கம் சார்பாக நவ.15 அன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தப் போராட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களில் சேலம் மாநகர காவல்துறையினர் வாலிபர் சங்கத்தினரை அச்சுறுத்துவது, வீடு தேடி மிரட்டுவது, கைது செய்வது என அராஜகத்தை நிகழ்த்தினர். அலைப்பேசியி மூலம் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கணேசனை அழைத்து காவல் நிலையத்தில் சிறை வைத்தனர்.

அவரைத்தொடர்ந்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. சதீஷ்குமார், கே.ஜெகநாதன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து 143,341,7(1) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பிணையில் விடுவித்த காவல்துறையின் அராஜகத்தையும் அணுகுமுறையையும் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ். பாலா, செயலாளர் செந்தில் ஆகியோர் கண்டித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வாலிபர் சங்கத் தோழர்களை கைது செய்து, வழக்குப் போட்ட வேகத்தை ராஜலட்சுமி, சவுமியா போன்ற பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டபோது காட்ட மறுத்தது ஏன்?. சர்க்கார் திரைப்பட பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி இது போன்ற பிரச்சனைகளில் பேச மறுப்பது ஏன்? போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மேற்கொள்ளும் காவல்துறையின் நடவடிக்கைகள் ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.