சென்னை,
மாணவிகள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கையினை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனுகொடுக்கப்பட்டது.

நமது மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலும், வன்கொடுமைகளும், படுகொலைகளும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதிய பாகுபாடும், ஆணாதிக்க சிந்தனையும் வேறூன்றி விருட்சமாக நமது தமிழ் சமூகத்தில் இருப்பதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.கடந்த மாதம் அக்டோபர் 22 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராஜலட்சுமி என்ற 8 ஆம் வகுப்பு தலித் சிறுமி அவரது பெற்றோர்களின் கண் எதிரிலேயே தினேஷ் எனும் சாதிய, ஆணாதிக்க வெறியனால் தலை துண்டாக வெட்டியெறியப்பட்ட படுகொலை சம்பவம் தமிழகத்தையே தலைகுனியச் செய்தது. நவம்பர் 5ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் மலை கிராமத்தை சார்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி சவுமியா, அப்பகுதியிலேயே வசிக்கும் சதீஸ், ரமேஷ் எனும் காம வெறியர்களால் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 10ஆம் தேதி படுகொலையாகியுள்ளார்.

தொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது. காவல்துறை உரியமுறையில் குற்றவாளிகளை பிடிக்காமல் காலம் தாழ்த்துவதும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ராஜலட்சுமியின் வீட்டிலும், பள்ளி மற்றும் ஊர் பொதுமக்களிடமும் விசாரித்த போது காவல்துறையினர் நடந்த சம்பவத்தை திரித்து குற்றவாளிகளின் குற்றத்தை மறைத்திட முயற்சித்துள்ளார்கள் என்பதும், கொலையாளிக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க உதவியுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. சவுமியா சம்பவத்தில் 5 ஆம் தேதிபுகார் கொடுக்கப்பட்ட போது காவல்துறையினர் பதிவு செய்யாமல் அடுத்த நாள் 6ஆம் தேதியே பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை முறையாக பரிசோதிக்காமல் இரண்டு நாட்கள் வள்ளலார் அரசு பெண்கள் காப்பகத்தில் எந்தவித முதன்மை சிகிச்சையுமின்றி தங்க வைத்துள்ளனர். அங்கு உடல் நிலைமிகவும் மோசமான பிறகே அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த மருத்துவமனையிலும் மருத்துவர்கள் முறையாக சிகிச்சையளிக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இதன் காரணமாகவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து சௌமியா கடந்த 10ஆம் தேதி இறந்துள்ளார். குற்றவாளிகளான சதீஸ், ரமேஷ் ஆகிய இருவருக்கும் ஆதரவாக கோட்டப்பட்டி காவல்நிலையம் உடந்தையாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட சவுமியா வீட்டிலும் பணம் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி பழங்குடியின பெண் என்பதால் அரசு பெண்கள் காப்பக நிர்வாகிகளும், மருத்துவர்களும், ஊழியர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர்.இந்த இரண்டு சம்பவங்களுமே அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டிலுள்ள குறைபாடுகள் தெள்ளத்தெளிவாக தெரிவதால் முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கைஎடுத்து காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவர்கள் மற்றும் அரசு காப்பக நிர்வாகிகள் மீது இ.த.ச 166 கீழ் வழக்குப் பதிவு செய்ய வெண்டும்.சாதிய ஆணாதிக்க வெறியினை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசே நடத்த வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாலியல் கொடுமைகளை தடுத்திட கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாநில நிர்வாகி உறுப்பினர் க.நிருபன், தென்சென்னை மாவட்டச்செயலாளர் தீ.சந்துரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.