மதுரை,
பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகள் மட்டுமல்ல எந்தத் தொழிற்சாலையிலும் சங்கம் அமைக்கும் உரிமையையாரும் தடுத்து நிறுத்திடவிட முடியாது. அது தொழிலாளி வர்க்கத்தின் உரிமை. அந்த உரிமையை சிஐடியு நிலைநாட்டும் என அமைப்பின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.

மதுரையில் நடைபெற்ற வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது :-

மறைந்த தோழர் வி.பி. சிந்தன்தொழிற்சங்கத் தலைவர் மட்டுமல்ல. அவர் உழைப்பாளி மக்களின்தலைவர். போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல. அனைத்துப்பகுதி தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். நாட்டின் சுதந்திர வேள்வியில் குதித்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 20-ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.கேரளத்தில் ஓடு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முதலாளிகளால் வஞ்சிக்கப்பட்டனர். அவர்களுக்கான சங்கம் வைக்கும் முயற்சியில் வி.பி.சிந்தன் ஈடுபட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய முதலாளிகளுக்கு எதிராக சங்கம் வைக்கக்கூடாது எனக் கூறினர். வர்க்க அடிப்படையில் காங்கிரஸ் முதலாளிகளுக்கு சாதமாக உள்ளது எனக்கூறி காங்கிரசிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

கேரளத்திலிருந்து சென்னைக்கு செல்லவேண்டுமென கட்சி கட்டளையிட்டவுடன் பெற்ற தாயிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் ரயிலேறிசென்னை வந்தவர் வி.பி.சிந்தன்.மதுரை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கட்சிப்பணியையும், தொழிற்சங்கப்பணியையும் மேற்கொண்டார். 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் வி.பி.சிந்தன் போட்டியிட்டார். எந்தவொரு பிரச்சனையையும் எப்படிப் பார்க்க வேண்டுமென கற்றுக் கொடுத்தவர் வி.பி.சிந்தன். முதலாளி இல்லாமல் ஒரு நாடு இருக்கமுடியும். தொழிலாளி இல்லாமல் ஒருநிமிடம் கூட நாடு இருக்க முடியாது. தொழிலாளி இன்றி உலகமில்லை என்பதை முதலாளி வர்க்கத்திற்கு உணர்த்தியவர் வி.பி.சிந்தன்.வி.பி.சிந்தனிடம் வர்க்கத் தெளிவும், வர்க்கக் கோபமும் இருந்தது. இதுவே அவரது பணியை மேன்மையடையச் செய்தது. மதம் குறித்து, இலக்கியம் குறித்துப் பேசுவதில் தனித்திறமை பெற்றவர்.22.10.1970-இல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதுதான் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமாகும். இதில் அனைத்துத் தொழிலாளர்களையும் முழுமையாக ஈடுபடுத்த வேண்டுமென வி.பி.சிந்தன் விரும்பினார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்துதான் பல்வேறு தொழிற்சாலைகளில் போராட்டம் வீறுகொண்டெழுந்தது.

ஒரு தொழிலாளி, முதலாளி, தொழிலாளி என்ற இருவருக்கும் நல்லவராய் இருக்க முடியாது. தொழிலாளி அவனுடைய வர்க்கத்தின் பின்னால் தான் அணி திரள வேண்டும் எனக்கூறியவர் வி.பி.சிந்தன். வி.பி.சிந்தனின் லட்சியங்களையும் அவர் விட்டுச்சென்ற பணிகளையும் சிஐடியு தொடர்ந்து தொய்வின்றி முன்னெடுத்துச்செல்லும். தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களே இருக்கக்கூடாது என அதன் முதலாளிகள் விரும்புகின்றனர். குறிப்பாக சிஐடியு சங்கம் இருக்கக்கூடாது. அதிலும் வெளியிலிருந்து ஒருவர் சங்கத்திற்கு தலைவராக இருக்கக்கூடாது என்றும் விரும்புகின்றனர்.

தொழிற்சங்கம் அமைப்பது தொழிலாளி வர்க்கத்தின் உரிமை. அதை யாராலும் பறித்துவிட முடியாது. ஹூண்டாய், யமஹா போன்ற நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக தொழிலாளர்கள் வீறுகொண்ட போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு துணை நின்றவர்கள் அந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்களே காரணம். 40-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் சிஐடியு கொடி பறந்து கொண்டிருக்கிறது.ஹூண்டாய் நிறுவனத்தில் கொடியேற்றியதற்காக 80 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சிஐடியு போராடியது. தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு இருந்தே தீரும்.சிஐடியு தொழிற்சங்கம் சங்க வித்தியாசமின்றி அனைத்து தொழிலாளர்களுக்காகவும் பணியாற்றவேண்டும். மாற்று சங்கத்திலிருப்பவரும் நம்முடைய தொழிலாளி தான். தொழிலாளி வர்க்கம் தான்என்பதை அவர்களுக்கு உணர்த்துவதோடு ஆட்சி மாற்றமும் வேண்டும் என்ற அரசியலையும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.