சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த உறுப்பினர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களின் முன்னணித் தலைவர் தோழர் ஜி.வீரய்யன் நவ.18 அன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். தோழர் ஜி.வீரய்யன் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட தொடங்கியவர். காலம் சென்ற தலைவர் தோழர் எம்.காத்தமுத்துவின் வழி காட்டுதலில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டவர். கடந்த 1964 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் திசைவழி பயணித்தவர். அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் அனுபவங்களை தொகுத்து, இரு நூல்கள் எழுதியுள்ளார். நவீன தாராளமயக் கொள்கைகளால் விவசாயமும், கிராமப்புற பொருளாதாரமும் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தோழர் ஜி.வீரய்யன் போன்ற அனுபவம் வாய்ந்த தோழர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. தோழர் ஜி வீரய்யன் அவர்களது நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வீர வணக்கம் செலுத்துகிறது.அன்னாரைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.