புதுக்கோட்டை:
புதுக்கோட்டையிலிருந்து அண்டக்குளம் செல்லும் சாலையில் புத்தாம்பூர் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில் புத்தாம்பூர் பகுதி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் திரும்பிய பகுதிகளில் எல்லாம் மரங்கள், மின் கம்பங்கள் உடைந்து கிடைக்கின்றன. இதனால் அந்த பகுதியில் மின்னிணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. புத்தாம்பூர் பகுதியில் இதுவரை எந்த ஒரு மீட்பு பணிகளையும் தொடங்கவில்லை. சாலையில் கிடந்த மரங்கள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக மின் இணைப்பு புத்தாம்பூர் பகுதியில் இல்லாததால் அந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் வரை சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். ஆனால் உதம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள் காலையில் முறையாக மீட்பு பணிகளை செய்யவில்லை எனவும், டாஸ்மாக் கடையை திறந்து வியாபாரம் செய்வதாகவும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், புதுக்கோட்டை- அண்டக்குளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ஆறுமுகம் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்து மின் வினியோகம் வழங்கப்படும். புயல் பாதிப்புகள் தீரும் வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.