சென்னை,
ஓசூரில் நடந்துள்ள ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து நவ.20 அன்று காலை 10 மணிக்கு தொல். திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஓசூருக்கு அருகே சூடகொண்ட பள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே நந்தீஸ்-சுவாதி ஆகியோரின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களை காவல் துறை கைது செய்துள்ளது. ஆனால், இந்த கொலை திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூலிப்படை கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் ஆணவக் கொலைகளை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைக ளைத் தமிழக அரசு இதுவரைப் பின்பற்றவில்லை. அது இனிமேலாவது அவற்றைப் பின்பற்ற வலியுறுத்தி நவ.20 அன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, வைகோ கூறுகையில்,
இந்த கொடூரக் கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,“ மனம் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ்-சுவாதி இருவரையும், சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்கள் “குலதெய்வம் கோவிலுக்குப் போகலாம்,” என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சித்ரவதை செய்து கொன்று ஆற்றில் தூக்கி வீசியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ராஜலட்சுமி, தினேஷ்குமார் என்ற வெறியனால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி மறைவதற்குள், அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவி சௌமியா, பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த கொடுமை நம்மை உலுக்குகிறது.
சாதி ஆணவப் படுகொலை செய்துள்ள குற்றவாளிகள் வாழவே தகுதி அற்றவர்கள். சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தப்பி விடாமல் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.