மும்பை:
சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட, சத்ரபதி சிவாஜி சிலையை உயரமாக அமைக்கக் கூடாது என மகாராஷ்டிர மாநில அரசை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மிரட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இதனை கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதேபோல மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜிக்கும் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. 98 மீட்டர் உயரத்தில் திட்டமிடப்பட்ட இந்த சிலை, அண்மைக்காலமாக 212 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வந்தன. இவ்விவகாரத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு, சிவாஜியின் சிலை உயரத்தை 20 மீட்டர் உயரத்தை குறைக்கவும், இதன் மூலம் 340 கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும் மகாராஷ்டிர மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், அரசின் முடிவுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே உயரமான சிலை என்ற பெயரை தற்போது படேல் சிலை பெற்று விட்டது. அதைவிட உயரமான சிலை அமைக்கப்படக்கூடாது என்பது பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் முடிவு. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த முடிவை மீற முடியவில்லை. உண்மையில் அவருக்கு துணிச்சல் இருந்தால் இருவரின் உத்தரவையும் மீற வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைப் பார்த்து பயப்படுவதை பட்னாவிஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: