புதுதில்லி:
கடந்த 27 ஆண்டுகளில், அரசு சொத்துக்களை அதிகளவில் விற்றது மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் என்பது தெரிய வந்துள்ளது.அதாவது, 1991-ஆம் ஆண்டில் இருந்து 2013 வரை 23 ஆண்டுகளில் விற்கப்பட்ட சொத்துக்களைக் காட்டிலும், மோடியின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் விற்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு (disinvestment ) அதிகமாகும்.

கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்து ரூ. 3 லட்சத்து 91 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு நிறுவனங்களின் பங்குகள், சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ. 2 லட்சத்து 91 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகள், மோடி தலைமையிலான கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் மட்டும் விற்கப்பட்டுள்ளன. முதலீட்டு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை (Department of Investment and Public Asset Management) புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழ் இத்தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது.

பாஜக ஆட்சி முடிய, இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில், விற்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு, நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்புக்கு அரசு நிறுவனங்களின் பங்குகளை சந்தையில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் இதுவரை ரூ. 15 ஆயிரத்து 247 கோடியே 11 லட்சம் அளவிற்கான பங்குகள் விற்பனை செய்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பாஜக அடைந்துவிட்டால், கடந்த 27 ஆண்டுகளில் விற்கப்பட்ட அரசின் சொத்துகள், பங்குகளில் 65 சதவிகிதம் பாஜக ஆட்சியில் மட்டும் விற்கப்பட்டதாக அமையும்.

கடந்த ஆண்டில் ரூ. 72 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை விற்க, மோடி அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் அதிகமாக ரூ. 1 லட்சத்து 56 கோடிக்கு சொத்துக்களை விற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, சொத்துக்களை விற்கும் மோடி அரசின் போக்கு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. “பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்தால், நிறுவனங்களின் மதிப்பு குறைந்துவிடும்” என்று மத்திய புள்ளியியல் துறை முன்னாள் தலைவர் பிரணாப் சென் கூறியுள்ளார்.“அரசு நிறுவனங்களின் சொத்துகள், பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் அரசு தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. ஆனால், இதை நிலை தொடர்ந்தால் அது சிக்கலாகவும் மாறக்கூடும்” மற்றொரு பொருளாதார வல்லுநரும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.