மறைந்த தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சரியாகச் சொன்னால் 1968ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து நான் நன்கறிவேன். அச்சமயம் திருவாரூர் அருகில் உள்ள ஆலத்தம் பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றுவந்தது. அதில் பங்கேற்றிருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரு அவசரத் தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சுந்தரய்யா அனுப்பி அதை நேரில் கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். எனவே சென்னையிலிருந்து அதை எடுத்துக் கொண்டு நான்ஆலத்தம்பாடி விரைந்தேன், அங்கே கூட்டம் நடைபெற்றுவந்த இடத்தின் வாயிலில் தோழர் வீரய்யன் நின்றிருந்தார். அவர் மூலம் அந்தக் கடிதத்தை கொடுத்தனுப்பினேன், அதுதான் வீரய்யன் அவர்களுடன் முதல் சந்திப்பு. அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவர்தான் முன்னின்று செய்து கொண்டிருந்தார்.அ

தன் பின் அவருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.அவ்வாண்டின் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெண்மணியில் 44 தோழர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட போது கட்சியின் நாகை வட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ஞானசம்பந்தம் ஆகிய இருவரும் எர்ணாகுளத்தில் நடைபெற்று வந்தகட்சியின் 8வது காங்கிரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.வெண்மணி கொடூரச் செய்தி அறிந்த உடனேயே வீரய்யன் ஒரு வாடகைக் காரில் அங்கே சென்று நடைபெற்ற கொடூரத்தைக் கண்டார். ஆத்திரத்திலும், வேதனையிலும் விரக்தியிலும் இருந்த அனைத்து தோழர்களையும் திரட்டினார். கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படிக் கூறினார்.அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் இறங்கினார். பொங்கி வந்த தனது வேதனையைக் கட்டுப்படுத்திக்கொண்டு கட்சியையும், கட்சியின் இயக்கத்தையும் நெருக்கடியான சோதனை காலத்தில் வழிநடத்திச் சென்றது அவரது சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியது.

அவருடைய போற்றத்தக்க செயல்களுள் ஒன்றுதஞ்சை மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் என்.வெங்கடாசலம், கொலை செய்யப்பட்ட பின் அவருடைய குடும்பத்தைப் பாதுகாத்ததோடு மட்டுமல்ல. பள்ளியில் படித்து வந்த அவரது மூன்று புதல்வர்களான ஜீவக்குமார், சுகுமார் மற்றும் கண்ணன் ஆகிய மூவரையும்  திருவாரூருக்கு அழைத்து வந்து கட்சி அலுவலகத்தில் தங்க வைத்து படிக்க வைத்ததாகும். தானே அம்மூவரின் படிப்பையும்கவனித்து அம்மூவரும் நல்ல கல்வி கற்க வைத்து வளர்த்தெடுத்தார். இன்று மூத்த புதல்வர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமாரும், இளைய புதல்வர் கண்ணனும் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

1987ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை நான் எழுதி வந்த போது வீரய்யன் அவர்களை ஒருநாள் நேரில் சந்தித்தேன். கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறப்பானது என்றும், பெரும் போராட்டப் பாரம்பரியம் உள்ளதென்றும் கூறி அவரது வரலாறை நான் உடனே எழுத வேண்டும் என்றும் வீரய்யன் என்னிடம் கேட்டுக் கொண்டார். தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்களை நான் நன்கறிவேன் என்ற போதிலும் அவருடைய கடந்தகால வாழ்க்கை வரலாறு எனக்குத் தெரியாது. எனவே தோழர் வீரய்யன் கூறியதை ஏற்று தனுஷ்கோடியின் பாங்கல் கிராமத்திற்குச் சென்று அவரை சந்தித்தேன். விபரங்களை சேகரித்து அவர் வாழ்க்கை வரலாறை எழுதி அதன் கைப்பிரதியை தோழர் வீரய்யன் அவர்களிடம் காண்பித்தேன். அதில் ஒரே ஒரு திருத்தத்தை மட்டும் செய்து நன்றாக இருக்கிறதென்று கூறி பாராட்டினார். அதை ‘‘சவுத் விஷன்’’ புத்தக நிறுவனம் வெளியிட்டது. “பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்தப் போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி” என்ற அந்த நூல் பெரும் பாராட்டைப் பெற்றது. இன்றுவரை ஐந்துமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு, வாரணாசியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாடுகளுக்குப் பின் அனைத்து ஆவணங்களையும் என்னிடம் அளித்து பிரசுரங்களாக தமிழில் எழுதித் தரும்படி அவர் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். அவை தனித்தனிபிரசுரங்களாக விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் அவர்கள் எழுதியிருந்த “காரல் மார்க்சின் நிலவாரம் லாபமாக உருமாற்றம்” என்ற ஆங்கில கட்டுரையைக் குறித்து தோழர்வீரய்யனிடம் கூறினேன். அவர் கேட்டுக் கொண்டபடி அதைதமிழாக்கி கொடுத்தேன். அதுவும் அவரது முன்னுரையோடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. காலப்போக்கில் அவருடைய வறுமையான குடும்ப நிலை, சிரமமான குடும்ப வாழ்க்கை, துணிச்சலான போராட்ட வரலாறு குறித்து அறிந்து கொண்ட நான்,அவர் தன் சுயசரிதையை எழுத வேண்டும் என்றும் அதைநான் படித்து முறைப்படுத்தி ஒரு சிறந்த புத்தகமாக ஆக்கித் தருகிறேன் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன்.‘நான் பெரிதாக என்ன செய்துவிட்டேன், வரலாறு எழுத’என்று கூறி மறுத்துவிட்டார்.

ஆனால் தொடர்ந்து நானும்தோழர் என்.சீனிவாசன் போன்ற தோழர்களும் வற்புறுத்தியதால் பின்னர் எழுதினார்.ஆனால் அதை மிகப் பெரிய சுயசரிதையாக எழுதிவிட்டார். அதில் மிகப் பெரும்பகுதி இயக்க வரலாறு ஆகும்.800-900 பக்கங்கள் வருமளவிற்கு அது இருந்தது. அதை அப்படியே முழுமையாக வெளியிட வேண்டுமென அவர்வற்புறுத்தினார்.அதை முதலில் படித்த தோழர் மதுக்கூர் இராமலிங்கம்அவர்கள் சில யோசனைகளைக் கூறினார். ஆனால் தோழர்வீரய்யனோ ஒரு சிறு மாற்றம் செய்யக்கூட விரும்பவில்லை. அப்படியே பல மாத காலம் நீடித்தது. பின்னர் தோழர் என்.சீனிவாசன் அவர்கள் என்னைச்சந்தித்து அந்த பிரதியை கொடுத்து நான் அதை முறைப்படுத்தி தர வேண்டும் என்றும் தோழர் வீரய்யனின் நிபந்தனையையும் கூறினார்.நான் உடனே அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். வாழ்க்கை வரலாறு, சுயசரிதை போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும்.

ஒருவர் வாழ்வில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அதில் இடம்பெற முடியாது. வாசகர்களின் மனஓட்டத்தையும் புரிந்து கொண்டு சுயசரிதை எழுதப்பட வேண்டும் என்பதையும் விளக்கினேன்.அவர் சம்மதித்தால் நான் அதை முறைப்படுத்தித் தருகிறேன் என்றும் எழுதினேன்.அவருக்கு என் கடிதம் வருத்தமாக இருந்த போதிலும், அதற்குச் சம்மதித்தார். நான் சென்னையில் இரண்டு மாதங்கள் தங்கி 900 பக்கங்களில் வரவேண்டிய நூலை 256 பக்க அளவில் சுருக்கித் தந்தேன். அது மட்டுமல்ல, அந்த சுருக்கப்பட்ட பிரதியை தாம்பரத்தில் இருக்கும் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அவர் படித்து சம்மதித்தப் பின்னரே அது வெளியானது. நல்ல பாராட்டுக்களைப் பெற்றது. முன்னுரையில் என்னையும் தோழர் மதுக்கூர் இராமலிங்கத்தையும் பாராட்டி இருந்தார். அந்நூலானது அவரின் சாதனையையும் தியாகத்தையும் என்றென்றும் இருக்குமாறு வரலாற்றில் பொறித்து விட்டது. தோழர் வீரய்யன் மிகவும் கூர்மையான சிந்தனை சக்திபடைத்தவர் ஆவார். ஒரு விசயத்தைப் பற்றி கேட்கும்பொழுது அதன் முக்கிய அம்சத்தை உடனே சுருக்கமாககூறிவிடுவார். கட்சித் தோழர்கள், குறிப்பாக தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா, கே.முத்தையா, ஆர்.ராமராஜ் போன்றவர்கள் மீது மிகுந்தஅன்பு கொண்டவர். ஏராளமான கட்சி தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறி தீர்த்து வைத்திருக்கிறார். அவருடைய துணிச்சல் அபாரமானது. அவர் உயிருக்கே பல ஆபத்துக்கள் இருந்த போதிலும் கையில் ஒருதுணிப்பையுடன் தன்னந்தனியாக எங்கும் செல்வார். அச்சம் என்பதை அறியாத வர்க்கப் போராளி அவர்.நாகையில் நடைபெற இருந்த கட்சியின் மாநில மாநாட்டில் மறைந்த தோழர்கள் கோ.பாரதி மோகன் மற்றும் தோழர் எம்.செல்லமுத்து ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கட்டாயம் வெளியிட வேண்டும்.

நான் அவற்றை எழுதித் தர வேண்டும் என்று தோழர் என்.சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அதற்காக தோழர் வீரய்யனின் சித்தாடி கிராமத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். பல மணி நேரம் அவர்இவ்விரு தோழர்களைக் குறித்த தகவல்கள், விபரங்களைக்கூறி அவ்விருவரின் இயக்கப் பங்களிப்பை உணர்ச்சி பொங்க விவரித்தார். இது, அந்த வாழ்க்கைவரலாறுகள் சிறப்பாக வெளிவர உதவின. நாகை மாநிலமாநாட்டில் தோழர் வீரய்யன் அவர்கள் முன்னிலையிலேயே இவ்விரு நூல்களும் வெளியிடப்பட்டதுதான் சிறப்பான அம்சமாக அமைந்தது.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும், தோழர் வீரய்யன் அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. சட்டமன்றத்தில் இருவரும் மோதிக் கொண்டாலும், தனிப்பட்டமுறையில் அந்த நட்பு நீடித்தது. ஒருமுறை விவசாயிகள் பிரச்சனைக்காக தோழர் வீரய்யன் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீரய்யன் துணிச்சல்காரர் என்பதைக் கூறுவதற்காகஅங்கே இருந்தவர்களிடம் வீரய்யனைச் சுட்டிக்காட்டி கலைஞர் வேடிக்கையாகக் கூறினார்: “இவர்தான் தலைவெட்டி வீரய்யன்’’ என்று கலைஞர் கூறவும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர் வீரய்யனும் சேர்ந்து.!

Leave a Reply

You must be logged in to post a comment.