ஈரோடு,

நீர்நிலை ஆக்கிரமிப்பு என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ள நீர்நிலை பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி இன்று ஆய்வு செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை ஆகிய எந்த ஓடையும் பாசன ஓடைகள் அல்ல. கசிவு நீர் ஓடைகள் மற்றும் ஈரோடு பகுதியில் சாக்கடைகளாக இருந்து வருகிறது. பவானிசாகர் அணைப்பாசனத்தின் போதும், மழை காலங்களில் மட்டுமே சிறிய அளவில் இதில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த ஒடையின் எந்த பகுதியிலும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் பாசனத்திற்கான தண்ணீரோ, மழை நீரோ தடை செய்யப்படவில்லை. சீமைக்கருவேல முள் மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு, நீதிபதிகள் நேரில் ஆய்வுகள் செய்தது போல, ஈரோட்டில் உள்ள ஓடைகளை ஆய்வு செய்தால் நீர் நிலைகள் தடுக்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு குடிசைவாசியும் தனது வாழ்நாள் சேமிப்பையும், கந்து வட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கி கட்டியிருக்கும் கனவு வீடுகள். இந்த எளிய மக்களின் வீடுகளை அழித்து விட்டு அவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தை அளிக்கும்  முறையையே பல கோடி ரூபாய் செலவில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் செய்து வருகிறது.

இப்பகுதிகளில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆய்வு செய்கையில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கூரபாளையம் பகுதியில் உள்ள 29 குடும்பங்கள், அதேபோல ராயபாளையம் பகுதியில் உள்ள 46 குடும்பங்கள் நீர் வழிப்பாதை என மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை பழைய ஆர்.எஸ்.ஆர் பதிவேடுகளில் வண்டிப்பாதை என உள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வழிப் பாதை என தவறாக சான்றளித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை நிர்வாகமும், நீதிமன்றமும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாக இருந்தால் மாற்று இடத்துடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இலையென்றால் அதே இடத்தில் பட்டா கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, லலிதா, எம்.நாச்சிமுத்து, தாலுகா நிர்வாகி பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.