திருப்பூர்,
வளர்மதி கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு தர வேண்டிய பணப்பயன்களைக் கொடுக்காமல் கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டம் தேவைதானா என்று சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பூரில் 65ஆவது கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டம் ஞாயிறன்று நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதை அறிந்து சிஐடியு, ஏஐடியுசி கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வளர்மதி கூட்டுறவு அலுவலகம் முன்பாக பெரிய தட்டிபலகையில் இந்த விழா தேவைதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, தமிழக அரசு அக்டோபர் மாதமானியத் தொகையாக ரூ.1கோடியே 92 லட்சம் வழங்கியுள்ளது.

அந்த தொகையை சரக்கு கொள்முதல் செய்யக்கூடிய இடைத்தரகர்களுக்கு கொடுத்துவிட்டு நியாயவிலைக் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள எந்த பணப்பயனும் தரப்படவில்லை. அத்துடன் பி.எப். தொகை ரூ.71 லட்சம் இதுவரை செலுத்தப்படவில்லை. இஎஸ்ஐ தொகை ரூ.24 லட்சமும், பணிக்கொடை தொகை ரூ.20 லட்சமும் செலுத்தப்படாத நிலை உள்ளது.அத்துடன் பண்டிகை மாதமான நவம்பரில் பண்டிகை முன்பணம் ஊதியம் தராமல், ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவிகிதம் அறிவித்தும் அதை அமல்படுத்தாமல் விட்டுவிட்டு கூட்டுறவு வார விழா தேவை தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.வளர்மதி கூட்டுறவு நிறுவனத்தின் நியாயவிலைக் கடைகளை நடத்துவதில் அயராது பாடுபட்டாலும், நிர்வாகத்தின் பாரபட்ச அணுகுமுறையால் ஊழியர்கள் நலிவை மட்டுமே சந்திக்கும் நிலை தொடர்கிறது. கூட்டுறவு செயல்படுவதற்கு அடிப்படையாக உழைப்பைச் செலுத்தும் ஊழியர் நலனை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அமைச்சர்கள் பங்கேற்று கூட்டுறவு வார விழா கொண்டாடுவது தேவை தானா என்றும் இந்த சங்கத்தைச் சேர்ந்தோர் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.