புதுதில்லி,
ரபேல் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் இன்று (வியாழன்) மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
மத்திய  ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலைமைகளைச் சரியாக மேலாண்மை செய்யாததாலும், கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்குப் பரிந்து செயல்பட்டு வருவதாலும், நாட்டின் பொருளாதாரமே மிகவும் மோசமான நிலையில் சீர்கேடடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் தற்சமயம் மிகவும் பாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஆட்சியாளர்கள்  ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றிடவில்லை. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றியதன் விளைவாக, அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் நிறுவனங்கள் மாறியிருக்கின்றன. உயர்மட்ட அளவில் ஊழல்கள் பெருக்கெடுத்திருப்பதற்கு இதுவே ஊற்றுக்கண்ணாகும். கார்ப்பரேட் ஆதரவு அரசின் நிலைப்பாடானது, நாட்டில் செயல்பட்டுவந்த நிறுவனங்களைக் கண்காணிப்பதற்காக இருந்து வந்த சுயேச்சையான அமைப்புகள் அனைத்தையும் செயலற்றவைகளாக மாற்றிவிட்டது. ரபேல் ஒப்பந்தமாக இருக்கட்டும், பிரதான் மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டமாக இருக்கட்டும், டெலிகாம் துறையில் நடைபெறும் செயல்திட்டங்களாகட்டும் அல்லது வங்கிகள் சூறையாடல்களாகட்டும் – இவை அனைத்திலுமே கூட்டுக்களவாணி முதலாளித்துவம் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. எனவேதான், நம் நாட்டின் பொருளாதாரமே இன்றையதினம் மிகவும் மோசமான முறையில் சீர்கேடடைந்துள்ளது.

ரபேல் ஊழல்
ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசாங்கம் மேற்கொண்டதில், அரசாங்கம் மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பாக புதிய உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது, ரபேல் விமானம் தொடர்பாக எவ்விதமான இறையாண்மைமிக்க உத்தரவாதமும் (sovereign guarantee) பெறவில்லை என்பதும், மாறாக சௌகரியம் தொடர்பான கடிதம் (letter of comfort) மட்டுமே பெற்றிருப்பதாகவும், இக்கடிதத்தின் மூலமாக இந்த மதிப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதையும் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருப்பதாகும்.

ரபேல் விமானத்தின் விலையைப் பொறுத்தவரையில், அரசாங்கம் 2018 மார்ச் மாதத்தில், விமானத்தின் அடிப்படை விலை, ஒவ்வொரு விமானத்திற்கும் தலா 670 கோடி ரூபாய் என்றது. ஆனால், 2016 செப்டம்பரில் 36 விமானங்களுக்கு அவற்றில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துக் கருவிகளுடனும் சேர்த்து 60 ஆயிரம் கோடி ரூபாய் என்று – அதாவது ஒவ்வொரு விமானத்திற்கும் 1,600 கோடி ரூபாய் என்று 2016 செப்டம்பரில் சுட்டிக்காட்டி இருந்தது.

டசால்ட் நிறுவனத்தின் தலைவர் (CEO), 36 விமானங்களின் விலையானது, முன்பு செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி 18 விமானங்களின் விலைக்குச் சமமாகும் என்று கூறியிருக்கிறார். இந்த இலக்கங்கள் ஒத்துப்போகவில்லை. டசால்ட் நிறுவனத்தின் தலைவர் 2015 மார்ச் மாதத்தில் எச்ஏஎல்  (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது கோரியிருந்த தேவைகளின் அடிப்படையில்  கிட்டத்தட்ட முடிவுற்றுவிட்டது என்று கூறியிருந்தார். இதுதொடர்பான ஒப்பந்தம் 2015 ஏப்ரலில் பாரிஸ் நகரில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது என்பதும், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் பின்னர் சந்தித்து 2015 மே மாதத்தில் இதனை இறுதிப்படுத்தியது என்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. இந்நிலையில், அனில்  அம்பானியின் செயல்படா நிறுவனமான ரிலயன்ஸ் பாதுகாப்பு என்னும் நிறுவனத்திடமிருந்தும் வருவாய் பெறப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதில் நடைபெற்ற ஊழலின் எதார்த்த நிலைமை இப்போது மிகவும் நன்கு நிறுவப்பட்டுள்ளது. எனவே, இதில் நடைபெற்ற ஊழலை உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றைத்தவிர வேறு எந்த அமைப்பினாலும் முழுமையாக வெளிக்கொணர முடியாது. நாட்டின் நலன் காத்திட, குறிப்பாக நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட, இது மிகவும் முக்கியமாகும். மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படக்கூடிய ஒவ்வொன்றுக்கும் இந்த அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகும்.

பணமதிப்பிழப்பு
2016 நவம்பர் 8க்கு முன் நாட்டில் ரொக்கப் பணம் இருந்த நிலைமை மீளவும் வந்துவிட்டது. பணமதிப்பிழப்பை அரசாங்கம் அறிவித்தபோது, நான்கு குறிக்கோள்களை அது கூறியது. ஆனால் அதில் ஒன்றுகூட எய்தப்படவில்லை. இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி இந்த அறிவிப்பால் பயனடைந்தவர்கள் யார்? வழக்கத்திற்குப் புறம்பாக மிக அதிக  அளவில் குஜராத் கூட்டுறவு வங்கிகளில் ரூபாய்  நோட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. மாறாக, பணமதிப்பிழப்பு அறிவிப்பானது ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செயல்பட்டுவந்த முறைசாராத் தொழில்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துக் கட்டியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகத் தாக்கி முடமாக்கியது.

வேலைவாய்ப்பிலும் இது கடும் பாதிப்பைக் கொண்டுவந்தது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் வெளியேறியபின்பு, (இந்திய ரிசர்வ் வங்கி அரசின் முடிவை அமல்படுத்தியிருந்தபோதிலும்கூட) பணமதிப்பிழப்பு குறித்து அரசுத்தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும், அப்போது இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற உண்மை, இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மேலும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும். மேற்கண்ட உண்மைகள் மற்றும் நிகழ்ச்சிப்போக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு இதன்மீது விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் இத்தகையே மோசமான நடவடிக்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் உண்மைகளைச் சரியாக வெளிக்கொணர முடியும்.

மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் சுதந்திரம் பறிப்பு
மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) சுதந்திரமான செயல்பாடு பறிக்கப்பட்டிருப்பது இப்போது நன்கு வெளிப்படையாகவே தெரியத் தொடங்கி இருக்கிறது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரின் செயல்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாகத் தற்போது, ஓர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் (CVC) விசாரணை செய்து கொண்டிருக்கிறது.  சிபிஐ இயக்குநர் தவறு செய்தார் என்பதை மெய்ப்பிப்பதற்கு ஆதரவாக உருப்படியாக எதுவும் வெளிக்கொணரப்படவில்லை என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகிறது. அதேசமயத்தில், ஆர்.கே. அஸ்தானாவை இயக்குநராக நியமிக்க முடியாமல் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் நீதித்துறையின் தலையீட்டின் காரணமாக அவரை சிறப்பு இயக்குநர் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆளும் கட்சியினரின் திட்டங்களுக்கு அஸ்தானா உதவி வந்திருப்பது நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவரின் உதவி என்பது, 2002 கோத்ரா விசாரணையைக் கையாண்ட விதத்திலிருந்தும், சமீபத்தில் மத்தியப் பிரதேச வியாபம் ஊழலைக் கையாண்ட விதத்திலிருந்தும் நன்கு தெரிய வருகிறது. லஞ்ச ஊழலில் அவருக்கிருந்த பங்கு குறித்து தற்போது சிபிஐ-இல் விசாரணை நடைபெற்று வருகிறது. ரபேல் ஊழல் தொடர்பாகவும் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஆதரவு அளித்து வருவது தொடர்பாகவும் சிபிஐ மேற்கொண்டுள்ள விசாரணைகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சிபிஐ-இல் மேற்கண்டவாறு இயக்குநர் மாற்றப்பட்டார் என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.  ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அரசாங்கம் மறுத்திருப்பதும், 2023க்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவரின் (சிஏஜி-யின்) ஆய்வுக்கு உட்படுத்தக்கூட மறுத்திருப்பதும் ஆட்சியாளர்கள் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் மற்றுமொரு நிறுவனத்தின் சுதந்திரத்தைப் பறித்திருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியில் நடந்துவருபவைகள்போல் முன்னெப்போதும் நடந்ததில்லை. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 7-ஆவது பிரிவை செயல்படுத்த வேண்டும் என்பது இதற்கு முன் நடந்ததே கிடையாது. இது, நாட்டின் நிதிநிலைமையை ஸ்திரமாக வைத்திருப்பதற்காக செயல்பட்டுவரும் இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் ஆணி வேரையே  வெட்டி எறிந்துவிடும். பணமதிப்பிழப்பு, வராக் கடன்களைக் கையாளும் விதம், ஒவ்வோராண்டும் இந்திய ரிசர்வ் வங்கி அடையும் இலாபத்தில் 99 சதவீதம் இப்போதைய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படுதல், இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தொகையாக இருக்கக்கூடிய 3.5 லட்சம் கோடி ரூபாயையும் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வதற்கான முயற்சி ஆகிய அனைத்தும் மத்திய வங்கியாக செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்களாகும். குஜராத்தில் தனியார் மின் திட்டங்கள் தொடர்பாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாரத ஸ்டேட் வங்கி அங்கே செயல்பட்டுவரும் கார்ப்பரேட்டுகளின் வங்கிகளைத் தள்ளுபடி செய்ததைப் பார்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இவ்வாறு அரசாங்கத்தின் கோரிக்கையை துணிச்சலுடன் மறுத்திருப்பதாகவே தோன்றுகிறது. கூட்டுக்களவாணிகளின் நலன்களைப் பாதுகாப்பது என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதலை ஏற்படுத்துவதற்கு இட்டுச் செல்லும்.

தேர்தல் பத்திரங்கள்
கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துடன் கள்ளத்தனமாக உடந்தையாக இருப்பதன் மூலம் பிரதமரும், பாஜகவும் அடைந்திடும் உடனடி ஆதாயங்கள் என்பவை தேர்தல் செலவுகளுக்கு கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுவது என்பதேயாகும். கார்ப்பரேட்டுகள் பாஜகவிற்கு அளித்தும் அளவிற்கும், இதர அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் அளவிற்கும் இடையே இருந்துவரும் இடைவெளி அனைவரும்  அறிந்ததே. தேர்தல் நிதி சம்பந்தமான சட்டங்கள் திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள், ஆளும் கட்சியினருக்கு அள்ளித்தரும் கார்ப்பரேட்டுகள் எவ்விதமான சட்டச் சிக்கல்களும் இன்றி வாரி வழங்குவதற்கு வாய்ப்புகளை அளித்துள்ளன. எனவே, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் வகைதொகையின்றி தேர்தல் பத்திரங்கள் மூலமாக வாரி வழங்கி வருவது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு தேர்தல் பத்திரங்கள் விநியோகிப்பதையே விலக்கிக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.