அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
நவம்பர் 16 அன்று, திரிபுராவில் பிஷல்கார் என்னுமிடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாணிக் சர்க்கார் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாஜகவைச் சேர்ந்த ஆட்கள், அலுவலகத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு, கூட்டத்தை சீர்குலைத்திட முயற்சித்திருக்கிறார்கள்.  முன்னதாக, கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த மக்களிடம், கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவாறு, பாஜக துஷ்டர்கள் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பின்னர் கூட்டம் முடிந்து அவர்கள் திரும்பிச் சென்றபோதும் தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். இதில் 35 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாராயண் சௌத்ரி என்னும் சட்டமன்ற உறுப்பினரின் கார் மீதும் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றனர்.

ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். பாஜக குண்டர்கள், தெற்கு திரிபுரா ஜில்லா பரிஷத் தலைவர், ஹிமாங்சு ராய், என்பவரின் வீட்டின் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். பின்னர், நவம்பர் 15 அன்று, பெலோனியா நகரத்தில், ஜில்லா பரிஷத் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது, பாஜக குண்டர்கள், ராய் மற்றும் இதர ஜில்லா பரிஷத் உறுப்பினர்களின் கார்கள் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் தாக்குதலின் விளைவாக சில காவல்துறையினரும் காயங்கள் அடைந்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மீதும், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் மீதும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய வருந்தத்தக்க நிலைமைக்கு பாஜக மாநில அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.
இத்தகைய வன்முறை நடவடிக்கைகளைத் தடுத்திடவும், மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகளை இயல்பான முறையில் மேற்கொண்டிடவும் உரிய நடவடிக்கைகளை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.