திருப்பூர்,
தமிழகத்தில் பணியாற்றும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 18 ஆம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழக பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான், சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன், சம்மேளனப் பொருளாளர் எம்.அசோகன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவையில் மாநில மாநாடு இதில் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டை 2019 ஜனவரி 26 ஆம் தேதி கோவையில் நடத்துவது என்றும், 25ஆம் தேதி அங்கு பஞ்சாலைத் தொழிலாளர் பேரணி, பொது மாநாடு நடத்துவது, இதில் மாநிலம் முழுவதும் பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு பயிற்சியாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி ரூ. 421-ஐ பல இடங்களில் வழங்குவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரத் தன்மையுடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் அதை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.600-க்கு குறைவில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு நடத்துகின்ற கூட்டுறவு பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல ஆண்டுகள் பணிபுரிந்தும் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

கூட்டுறவு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ரூ. 421-க்குகுறைவில்லாமல் ஊதியம் கிடைக்கச் செய்யவும், தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என் டி சி ஆலைகளில் ஊதிய உயர்வு கிடைக்கச் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளோடு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெற இருக்கின்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆலை வாயில்களில் கேட் கூட்டங்கள் நடத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது. தமிழகத்தில் பஞ்சாலைகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை. தினக்கூலி, கேம்ப் கூலி, விடுதி பெண்கள் திட்டம் என்ற பெயர்களில் உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது. பஞ்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி தீர்மானிக்க வேண்டும். பயிற்சியாளர்களுக்கு ரூ.421 அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.4,000 கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 18 ஆம்தேதி சென்னையில் கோட்டை முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.