ஓசூரில் அரங்கேறிய சாதி ஆணவ படுகொலையை அடுத்து உயிரிழந்த நந்திஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்ததுடன் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் பெற்று தருவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சூடுகொண்டப்பள்ளியில் வெங்டேஷபுரம் எனும் கிராமப் பகுதியைச் சார்ந்த பட்டியலின சமூகத்தில் பிறந்த நாராயணப்பானின் மகன் நந்தீஷ். இவர் 7 ஆம் வகுப்பு வரை படித்த 25 வயது இளைஞன். இவர் ஓசூரில் சிவா ஹார்டுவேர்சில் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சார்ந்த சீனிவாசனின் மகள் சுவாதி(19). இவர் கிருஷ்ணகிரியில் பி.காம் படித்து வந்தார். இருவருக்கும் 4 ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ல் நந்திஸ் – சுவாதி அங்குள்ள கோவிலில் திருமணம் புரிந்ததுடன் சூளகிரி பதிவு அலுவலகத்தில் முறையாக திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஓசூரில் தனிவீடு எடுத்து குடியிருந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நந்திஷ்க்கும் அவர் குடும்பத்தினருக்கும் சுவாதியின் குடும்பம் மற்றும் அவர்களின் சமுகத்தினராலும் மிரட்டல்களும் தாக்குதல்களும் நடந்துள்ளன .

இந்நிலையில் கடந்த 10 ஆம்தேதி இரவு இருவரும் கடத்தப்ட்டுள்ளனர். இரவு 2.15 மணிக்கு கடத்தப்பட்டுள்ளதாக நந்திஸ் தன் தம்பிக்கும் காவல்துறைக்கும் குறுந்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுக்குள்ள நெருக்கடி குறித்து ஏற்கனவே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை கண்டுகொள்ளவில்லை எனவும் நந்திஸ்ன் குடும்பத்தார் கூறுகின்றனர்.

இதற்கிடையில் நேற்று நந்தீஸும், சுவாதியும் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்ரா கிராம நீர்வீழ்ச்சியில் அடித்து முகத்தினை தீயில் கருக்கி கொன்று கை, கால் கட்டி பிணமாக அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். உள்ளூர் மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுக்க, உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து அவர்கள் இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஸ்-சுவாதி இணையர்கள்தான் என்பதை கண்டறிந்தது கர்நாடக காவல்துறை.

செய்தி அறிந்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுகந்தி மாநிலக் குழு உறுப்பினர் ஜி . ஆனந்தன் மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் பிஜி மூர்த்தி, தீணடாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆனந்த குமார், செயலாளார் இருதயராஜ், வாலிபர் சங்கமாநில துணை செயலாளர் பிரவீன் குமார் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட நந்திஸ் குடும்பத்துக்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் மற்றும் தலைவர்களும் ஆருதல் தெரிவித்தனர். கொலை – ஜாதி வெறி ஆணவப்படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன்: “நந்தீஷ்-சுவாதி சாதி ஆணவப் படுகொலைக்குப் பின்னால் ஒரு சாதி வெறி அணிதிரட்டல் இருக்கிறது. சாதி வெறி சதி இருக்கிறது. எனவே, யார் இந்தச் சதியில் சம்மந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். சிபிஐ(எம்) ஐ பொறுத்த வரையில் மரணதண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளைச் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கினால் கூட தப்பில்லை என்று நினைக்கிறேன்,”என்றார்.

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தமிழக அரசு உடடினயாக தனிச் சட்டம் இயற்றிட வேண்டும்: 8 அமைப்புகள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு

சாதிய ஆணவப் படுகொலையைக் கண்டித்தும் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி 8 அமைப்புகள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

நந்தீஷ் – சுவாதி கொலையை சாதி ஆணவப் படுகொலை என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தமிழக அரசு உடடினயாக தனிச் சட்டம் இயற்றிட வேண்டும், நந்தீஷ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 120 நாளில் நீதிமன்ற நடவடிகக்கைகளை நிறைவு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட வேண்டும், சட்டத்தின் படி அரசு வேலை வழங்கிட வேண்டும். அதுவரை சட்டப்படி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், நீலம் பண்பாட்டு மையம் இயக்குநர் பா.ரஞ்சித், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பிரவீன்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சங்கர் சமூகநீதி அறக்கட்டளை எஸ்.கௌசல்யா ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் வழங்கினர்.

https://www.facebook.com/theekkathir/videos/353358111897619/

Leave a Reply

You must be logged in to post a comment.