சென்னை,
குட்கா வழக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பெயர் இடம்பெறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நள்ளிரவில் சி.பி.ஐ இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணைமுடியும் வரை, சி.பி.ஐ பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில்ஒரு முதற்கட்ட குற்றப் பத்திரி கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசுக்கு ரூ. 250 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, ரூ. 40 கோடிக்கு மேல்மாமூல் பெற்றதற்கான “குட்கா டைரி” கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ அதிரடியாக சோதனை நடத்தியது. அதிமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில்,தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்காகம்பெனியைச் சேர்ந்தவர்களும்மட்டுமே இடம் பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் “பிதாமகன்களாக” திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர்பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா அல்லது அரசியலா அல்லது மேலிடத்துக் கட்டளையா என்பதெல்லாம் கேள்விக்குறியாகியிருக்கிறது. குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகிறது. ஆகவே, குட்கா மாமூல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாகநடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம் பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்காவிற்பனை “மாமூல்” விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறு வதால், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. நடந்து கொள்ள வேண்டும்.அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணைகோரி திமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிட நேரிடும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: