கஜா புயல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

தமிழகத்தில் கரையைக் கடந்துள்ள கஜா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிப்புகள் குறித்த செய்திகள் வருகின்றன. புயலின் பாதிப்புகள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவே சில நாட்கள் எடுக்கும் என தெரிகிறது. தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, ஓகி புயல் சூழலைப் போன்ற நிலைமை தவிர்க்கப்பட்டது. பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் பாராட்டுக்குரியவை.

பேரிடர்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது மிக அவசியமாகும். அரசுடன் கைகோர்த்து தனியாரும் தாராள உதவிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய உதவிகளை அரசு முன்நின்று ஒருங்கிணைப்பது அவசியமாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் உடமைகள், சொத்துக்கள் சேதம், வாழ்வாதார பாதிப்புகள் மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பு அளவிட முடியாததாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதற்கு முறையான கணக்கெடுப்புகள் நடத்திட வேண்டும். அவசர அவசியமாக மின் துண்டிப்புகளை சரி செய்து அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரத்தை பழைய நிலைமைக்கு மீட்டெடுக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: