சென்னை,
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்கிற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான இந்த அறிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடிநீரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது சட்ட விரோதம் எனக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தான் காரணம் என உறுதி செய்ததாலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நிலத்தடிநீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்குவிசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: