தாராபுரம்,
தாராபுரத்தில் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு துணை ஆட்சியர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை சார்பில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வியாழனன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு தாராபுரம் துணை ஆட்சியர் கிரேஸ் பச்சுவா தலைமை வகித்தார். இம்முகாமில் வருவாய்துறை சம்பந்தமான 40 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் கல்வி உதவித்தொகை, மானியம் தொடர்பாக 2 சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று துணை ஆட்சியர் நிலுவையிலுள்ள மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சம்பந்தபட்ட ஊழியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். வாட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, குறைதீர்க்கும் முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வருவாய், வேளாண்மை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் 10 மணிக்கே தாலுகா அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் துணை ஆட்சியர் மதியம் 12 மணிக்கு தான் வந்தார். இதனால் காத்திருந்த அதிகாரிகள் மற்றும் அன்றாட வேலைகளை விட்டு விட்டு வந்திருந்த பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து இதுபோன்ற பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு துணை ஆட்சியர் தாமதமாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.