தருமபுரி:
சிட்லிங்கிராமத்தில் பழங்குடி மாணவி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் உள்ளிட்ட 5 பேர், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

அரூர் வட்டம்,  சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே  ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை சசெய்தனர்  இந்த சம்பவம் தொடர்பாக, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகியோரை கோட்டப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த முத்துகிருஷ்ணன் தருமபுரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக அரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்  லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  அவர் மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கோவிந்தன், தருமபுரியில் உள்ள காப்பகத்தின் கண்காணிப்பாளர் மாதேஸ்வரி,  காப்பாளர் புனிதா ஆகிய 5 பேரும் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த 5 பேரிடமும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்னிலையில், பூட்டிய அறையில் ரகசிய வாக்குமூலம் தனித்தனியாக பெறப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரும்  ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.