தருமபுரி:
தருமபுரியில் பழங்குடியின மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டும் என விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்,

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிந்து கைது செய்ய வேண்டும். மாணவி இறப்புக்கு காரணமான கோட்டப்பட்டி காவல் ஆய்வாளரை 304 ஆவது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும். சிகிச்சை அளிக்காத காப்பக பொறுப்பாளர்கள், உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது 166ஏ, பிரிவின் கீழ் வழக்கு பதியவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ 25 லட்சம் நிவாரணம், அரசு வேலை, 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்சார்பில் அரூர் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

பெ.சண்முகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், தூய்மை இந்தியா குறித்து கடந்த 4 ஆண்டுகாலமாக மத்திய அமைச்சரும், பிரதமர் மோடியும் மத்திய அரசும், நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றனர். நாடு முழுவதும் தனிநபர் கழிப்பிடத்தை கொடுத்து விட்டதாக பொய்பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கின்றனர். பல இடங்களில் கழிப்பிடம் இல்லாமல் இயற்கை உபாதைக்கு சென்றவர்கள்  பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர், ஆகவே, எங்கு தூய்மை வாழ்கிறது? எனவே, மத்திய அரசு பொய்பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு வீட்டிற்கு ஒரு கழிப்பறை என்பதை உறுதிப்படுத்தினாலே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறையும்.

செளமியா விவகாரத்தில் காவல்துறை செய்தது என்ன? புகாரை வாங்கியிருக்க வேண்டும். வாங்காமல் அலைக்கழித்தது காவல்துறையின் முதல் குற்றம். கடமை செய்ய தவறியதால் செளமியா மரணமடைந்திருக்கிறார். ஆகவே, புகாரை வாங்க மறுத்ததிற்காக காவல் ஆய்வாளர் மீது குற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல நாட்களாகியும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர். இதை செய்யவில்லை.

இப்படி இருந்தால் காவல்துறை மீது எப்படி நம்பிக்கை வரும். புகாரை வாங்கிய காவல்துறை மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை. ஆகவே காவல்துறை திட்டமிட்டு மூடி மறைக்கவேண்டும் என செயல்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது, எனவே உடனடியாக இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்தில் குற்ற சம்பவத்தை மூடி மறைத்த காவல் ஆய்வாளர் மீதும் மருத்துவ சிகிச்சை அளிக்காத மருத்துவர், காப்பக உரிமையாளர் ஆதியோர் மீதும் வழக்கு பதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மலைவாழ் மக்கள் சங்கம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும். நீதிமன்றம் சென்று சட்டரீதியான தண்டனையை பெற்று தரும். வாச்சாத்தி வழக்கில் 269 பேரையும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து அனைவருக்கும் தண்டனை பெற்று தந்தோமே அதே போன்று மாணவி செளமியா இறப்பு சம்பவத்தில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை பெற்றுதரும்வரை போராடுவோம். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.

பி.டில்லிபாபு
தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநிலதலைவர் பி.டில்லிபாபு பேசியதாவது, மாணவி செளமியா இறப்பையடுத்து போராடிய உறவினர்களிடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாணவி உயிரிழப்புக்கு காரணமான கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், இதுநாள் வரை ஆட்சியர் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சம்பவத்தை மூடிமறைக்க நினைக்கும் அதிமுக அரசுக்கு அதற்கு மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க செல்லும் சமூக செயல்பாட்டாளர்களை மிரட்டுவது, கைது செய்வது போன்ற நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது கண்டிக்கதக்கது என அவர் தெரிவித்தார்.

முன்னதாக. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர் கண்ணகி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா, மொரப்பூர் கே.தங்கராஜ் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, டி.சேகர், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுமதி, ராஜி சொக்கலிங்கம்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செமியாவின் பெற்றோர். உறவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.