கஜா புயல் வியாழன் நள்ளிரவு கரையை கடந்த போது திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. முத்துப்பேட்டை, திருத்துறைப் பூண்டி நகரங்களில் தொலைத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் கஜா புயலால், ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்சாரம் முழுமையாக தடைப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த மின்விசிறி மின்சாதனப் பொருட்களும் புயல் காற்றில் தாக்குப்பிடிக்க முடியாமல் கழன்று விழுந்தன.

திருவாரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. முறிந்து விழுந்த மரங்களை நகராட்சி ஊழியர்கள் மரம் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு அகற்றி வருகின்றனர்.

எளிதில் திறக்கமுடியாத தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் கிழக்கு கோபுரத்தில் உள்ள 40அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கதவு புயலின் வேகத்தில் பூட்டுகளை உடைத்துக்கொண்டு தானாகவே திறந்துள்ளது.

திருவாரூரில் அமைச்சர் காமராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். கார் செல்ல சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் இடையூறாக இருந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டதாக அவர் கூறினார். மரங்களை அகற்றும் பணிகளை முடுக்கிவிட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தும் பேசினார். பின், விரைவாக மீட்புப்பணிகள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.