திருப்பூர்,
செங்காட்டுபாளையம் பகுதி அருந்ததி மக்களை சாதி பெயர் சொல்லி திட்டியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, செங்காட்டுபாளையம் பகுதியில் அருந்ததி மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்களன்று இப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன் குழந்தைகளுடன், கார்த்திக் என்பவரின் இருசக்கர வாகனத்தில் விநாயகர் கோவில் அருகே வந்த பொழுது பால்காரர் சிவக்குமார் என்பவர் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த குழந்தைகளுக்கு கொடுவாய் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்கள். இதுகுறித்து குழந்தைகளின் தாத்தா, ஊரில் சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது ஊரின் முக்கிய பிரமுகர்களான நாச்சிமுத்து, நந்தகுமார் உள்ளிட்டவர்கள் சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் அருந்ததி பகுதிக்கு வரும் குடிநீர் குழாயை உடைத்துள்ளனர். மேலும் அருந்ததி மக்கள் பொதுபாதையில் நடக்க கூடாது எனவும் மிரட்டி உள்ளனர். இந்த பிரச்சனை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: