சென்னை, நவ. 15-இந்தியாவில் சுரண்டலற்ற சமத்துவமான அனைவருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய சமூகத்தை உருவாக்க நவம்பர் புரட்சி நமக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தராம் யெச்சூரி கூறினார். சென்னையில் புதனன்று (நவ.14) நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில் அவர் பேசியது வருமாறு:

மனித குல விடுதலைக்கும், பல்வேறு நாடுகளின் விடுதலைக்கும் மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி வழிகாட்டியது. எனவே தான் அந்தபுரட்சி முடிந்து நூற்றாண்டு களுக்கு பிறகும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். இந்தியா போன்ற பல காலனியாதிக்க நாடுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற நவம்பர் புரட்சி உதவியது. சோவியத் புரட்சியை ரவீந்திரநாத் தாகூர், பாரதியார் உள்ளிட்ட உலகப்புகழ்பெற்ற பல கவிஞர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். அந்தபுரட்சி இன்றும் பல புரட்சிகர சக்திகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக திகழ்கிறது. சுரண்டப்பட்ட மக்களை சுரண்டும் வர்க்கத்திடமிருந்து அதுதான்விடுவித்தது.

மகத்தான சாதனை

சமத்துவமான, பெண்களுக்கு எல்லாவகையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை வழங்கியது. முதலாளித்துவ சமூகத்தைவிட பல மடங்கு உயர்ந்த சமூகத்தை அதனால் ஏற்படுத்தமுடிந்தது. முதலாளித்துவம் 300 ஆண்டுகளில் சாதித்ததை நவம்பர் புரட்சி முப்பதேஆண்டுகளில் சாதித்துக் காட்டியது. இதுதான் உண்மை. ஒரு முறை ரவீந்திரநாத் தாகூர் சோவியத் யூனியனுக்கு சென்று வந்தபின்னர் ‘ரஷ்யாவுக்கு கடிதம்’’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் 10 முதல் 15 ஆண்டுகளில் சோவியத் யூனியனில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம்பவே முடிய வில்லை. வேலையின்மை, வறுமை ஒழிக்கப்பட்டு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இது மகத்தான சாதனை என்று அவர் குறிப்பிட்டார். இன்று வரை இந்த சாதனையை முதலாளித்துவ அரசுகளால் நிகழ்த்திக்காட்ட முடியவில்லை.

இட்லரை தோற்கடித்த செங்கொடி

சோசலிச சமூகம்தான் சோவியத் யூனியனை ஏகாதிபத்திய சக்தி களுக்கு சவால்விடக்கூடிய அளவுக்கு சக்திமிக்க நாடாக மாற்றியது. இரண்டாம் உலகப் போரின் போது உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கிய பாசிச இட்லரை தோற்கடித்தது. இதை உலகம் மறந்துவிடவில்லை.இதற்காக சோவியத்யூனியனின் கோடிக்கணக் கான மக்கள் தங்களது இன்னு யிரை தியாகம்செய்தனர்.அந்த இட்லரை அமெரிக்க கொடி தோற்கடிக்கவில்லை, பிரிட்டன் கொடி தோற் கடிக்கவில்லை, சோவியத்யூனி யனின் செங்கொடி தான் வீழ்த்தியது. அதுதான் சோசலிசம்.

நம்மால் தான் சிறந்த இந்தியாவை உருவாக்கமுடியும்

தொழிலாளர்கள், விவசாயி களை ஒன்றுபடுத்தாமல் எந்த ஒரு வர்க்கப்போராட்டமும் எந்த ஒரு புரட்சியும் வெற்றிபெறாது என்று லெனின் அடிக்கடி கூறுவார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மத்தியில் உள்ள மக்கள் விரோத அரசுக்கு எதிராக தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள். தில்லியில் சமீபத்தில் கூட விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் இதரபகுதி தொழிலாளர்களும் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தினார் கள். மோடி அரசால் சிறந்த இந்தியாவை உருவாக்கமுடியாது, நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போன்று சுரண்டலற்ற சமத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கக் கூடிய, எல்லா இந்தியர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரம் அளிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை தொழிலாளர்கள், விவ சாயிகளின் ஒற்றுமையை மேலும்

பலப்படுத்துவதன் மூலம் தான் ஏற்படுத்தமுடி யும். ஆனால் வகுப்புவாத சக்திகள் இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பலவழிகளில் முயற்சிக் கின்றன. மதரீதியாக மக்களை திரட்ட முயற்சிக் கின்றன. பசுபாதுகாப்பு என்ற பெயரில் இந்துமுஸ்லிம் இடையே வெறுப்பை விதைக் கிறார்கள். நாம் என்ன சாப்பிடவேண்டும், எப்படிஉடை உடுத்தவேண்டும் என்று கட்டளை யிடுகிறார்கள். யார் உங்களுக்கு நண்பனாகஇருக்கவேண்டும்? யார் இருக்கக்கூடாது என்று கூட அவர்கள் சொல்லத் துவங்கிவிட்டனர். லவ் ஜிகாத் என்ற பெயரில் கலப்புத் திருமணத்திற்கு விரோதமாக நடந்துகொள்கிறார்கள். எனவே அவர்களின் எந்த ஒரு சீர்குலைவு முயற்சிகளையும் உழைப்பாளி மக்களாகிய நாம் அனுமதித்துவிடக்கூடாது.

அமெரிக்காவின் இளைய பங்காளி

மோடி அரசு இன்று அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இளைய பங்காளியாக மாறியிருக்கிறது. உலகில் பல்வேறு நிகழ்வுகளில் அமெரிக்கா எடுக்கக்கூடிய முடிவுக்கு ஒத்துப்போகக்கூடிய அளவுக்குமத்திய அரசு நடந்து கொள்கிறது.கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி ஐந்துமுறை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற போதெல்லாம் இந்தியா அமெரிக்காவை சார்ந்திருக்கக்கூடிய நாடாக மாறுவதற்கான ஏதாவது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றுதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து அந்நிய மூலதனம் மேலும் மேலும் லாபம் அடைய என்ன செய்யவேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறது. உள்நாட்டில் உள்ள பெருமுதலாளிகள் கொழிக்கவும் அனைத்துவிதமான வளங்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் இந்தியாவில் கடனை செலுத்தாமல் வெளிநாடு களுக்கு தப்பிஓடவும் எல்லாவிதமான ஏற்பாடு களையும் மோடி அரசு செய்துதருகிறது.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்குவிற்கப்படுகின்றன. அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட்டு இந்திய நாடு சூறையாடப்பட்டு வருகிறது.

பிற்போக்கு சக்திகள்

இந்தியாவிலும் ரஷ்யா போன்று புரட்சி வெற்றிபெறும். ஆனால் தற்போதுள்ள மக்களைசாதியவாத சக்திகளிடமிருந்தும் மதவாத சக்திகளிடமிருந்தும் பெண்களை பிற்போக்கு சக்திகளிடமிருந்தும் நாம் விடுவிக்கவேண்டும். இல்லையென்றால் சாதி ரீதியாக , மத ரீதியாக நமது வர்க்க எதிரிகள் மக்களை எளிதாக பிளவுபடுத்தி விடுவார்கள். இதைத்தான் மோடி யும் அவரது கட்சியும் செய்துகொண்டிருக்கிறது. எனவே நாம் அரசியல், பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டே சாதியவாதத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் போராடவேண்டும். இதில் நாம் வெற்றிபெற்றால் தான் சோசலிசத்திற்கு முன்புஜனநாயக புரட்சியை நாம் நிகழ்த்திக் காட்டமுடியும்.

இந்துக்களுக்கும் விரோதமானது பாஜக

எனவே தான் தற்போதுள்ள மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசுதோற்கடிக்கப்படவேண்டும் என்று விரும்பு கிறோம். புதிய அணிசேர்க்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து மோடி அரசின் தோல்வியை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. நமது அரசியல் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமைவழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில்தான் சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதை இன்று சிலர் ஏற்கமறுத்து வருகிறார்கள். முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமிய பெண் களுக்கு சமத்துவம் வழங்கவேண்டும் என்று அவசரச்சட்டத்தை நிறைவேற்றியவர்கள், சபரிமலை விவகாரத்தில் இந்து பெண்களுக்கு சமத்துவம் வழங்கக்கூடாது என்கிறார்கள். இதற்காக ஆர்எஸ்எஸ் பாஜகவை முஸ்லிம் கட்சி என்று கூறலாமா என்றால் இல்லை அவர்கள் முஸ்லிம்களுக்கும் ஆதரவாக இல்லை இந்துக்களுக்கும் ஆதரவாக இல்லை. இருவருக்கும் எதிரானவர்கள்தான் அவர்கள்.இந்த விஷயத்தில் அவர்களுக்கு எந்தவித கொள்கைப்பிடிப்பும் இல்லை. ஒன்றே ஒன்றுதான் , ஏதாவது சாக்குபோக்கு சொல்லி மக்களை பிளவுபடுத்த வேண்டும். இதன் மூலம்தற்போதுள்ள நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் எந்த வித மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.

என்றும் வழிகாட்டியாக….

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை யையே சிதைத்துக்கொண்டிருக்கும் மோடி அரசுக்கு எதிராக நாம் உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டி போராட நமக்கு எப்போதும் நவம்பர் புரட்சி வழிகாட்டியாக விளங்கும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச ஆதரவை திரட்ட வேண்டியுள்ளது. நவம்பர்புரட்சி அதைத்தான் செய்தது. ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் சர்வதேச ஆதரவை திரட்டவேண்டும். உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற மார்க்சிய வார்த்தையின் உண்மையான அர்த்தம் இதுதான். சர்வதேசஆதரவு இருந்தகாரணத்தினால் தான் பிரிட்டிஷ்ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவால் விடுதலை பெறமுடிந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வியட்நாமை விடுவிக்கமுடிந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் வெற்றிபெறவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச ஆதரவு இருந்ததும் காரணம். இன்றைய உலக நிகழ்வுகளில் இத்தகைய ஆதரவு மிகமிக அவசியமாகிறது. எந்தெந்த நாடுகளில் மக்கள் சுரண்டப்படுகிறார்களோ அந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதுமிக மிக அவசியம். இதன் மூலமே ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான சர்வதேச அளவிலான ஒருமைப்பாட்டை உருவாக்கமுடியும்.

தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம்

அண்டை நாடான இலங்கையில் ஜனநாயக விரோதமாகவும் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் மேற்கொள்ளப்பட்ட ராஜபக்சே நியமனத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் வெற்றிபெற்றுள்ளது.அந்த நாட்டில்ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அந்நாட்டு மக்களே தீர்வு காண்பார்கள். அந்நாட்டு உச்சநீதிமன்றம் முடிவு செய்யும், யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அந்நாட்டில் எந்த ஒரு அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கக் கூடிய வகையிலும் இலங்கை சர்வதேச சமூகத்திடம் அளித்த உறுதியையும் காப்பாற்ற வேண்டும். அதில் இருந்து சிறிதும் பின்வாங்கக்கூடாது. இவ்வாறு யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையை எஸ்.ரமேஷ்குமார் தமிழாக்கம் செய்தார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலசெயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச்செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை) எல்.சுந்தரராசன் (வடசென்னை) மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.