தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு ஜவுளி கடையில் வேலை செய்து வந்த இளம்பெண் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று தஞ்சை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது : “கடந்த நவம்பர் 7-ம் தேதி திருபுவனத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெணை பாலியல் கும்பல் வல்லுறவு செய்யப்பட்டார். இதில் அப்பெண்ணின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து சின்னப்பா என்பவரை கைது செய்துள்ளனர். ஆனால் இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும் உடல்மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.’’ இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு, மாவட்டத் தலைவர் மணிமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.