கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா இசைநிகழ்ச்சி தடுக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இசைப்பணிகளோடு தன்னை முடக்கிக்கொள்ளாமல் சமூக நடப்புகள் மீது தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைப்பவராகவும் இயங்கிவருகிறார். கர்நாடக இசையை வெகுமக்களுக்கானதாக, மதச்சார்பற்றதாக, சாதியற்றதாக தற்காலப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தை பலவாறாக வெளிப்படுத்தி வருபவர். நாட்டின் பன்மைத்துவத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க தன்னாலானதை செய்துகொண்டிருப்பவர். இதுபோன்ற காரணங்களுக்காகவே, ஒற்றைமயமாக்கச் சகதிக்குள் ஊறி அழுகிக் கொண்டிருக்கும் இந்துத்வாதிகள் இவர் மீது பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவரது நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்து நடக்கவிடாமல் தடுக்கின்றனர்.

இந்திய விமான நிலைய ஆணையத்திற்காக ஸ்பிக் மேக்கே என்ற அமைப்பு புதுடில்லியில் 2018 நவம்பர் 17, 18 தேதிகளில் நடத்தவிருந்த நடனமும் இசையும் என்கிற நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்வும் இடம் பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது கருத்தியல் எதிரிகள் “தேச விரோதி, இந்திய விரோதி, இந்துமத எதிர்ப்பாளர், அர்பன் நக்ஸல்” என்று அவர்மீது அவதூறு பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் கிளப்பிவிட்டு அவரை இந்த நிகழ்விலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மிரட்டினர். மத்திய ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்புள்ள இவர்களது அழுத்தத்திற்குப் பணிந்து இந்திய விமான நிலைய ஆணையம் இந்த நிகழ்வை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது. சமூக ஊடகங்களில் தமக்கென 32 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகவும் நாட்டின் விவாதங்களையும் நிகழ்ச்சிநிரலையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்றும் ஆளுங்கட்சித் தலைவர் சில தினங்களுக்கு முன் சொன்னதன் பொருள் இதுதான் என தமுஎகச குற்றம்சாட்டுகிறது.

சங் பரிவார்த்தினர், எப்படியான நிகழ்வுகள் நடக்கவேண்டும், ஒரு நிகழ்வில் யாரெல்லாம் பங்கெடுக்கலாம், பங்கெடுப்பவர்கள் எவ்விதமான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தும் அதிகாரம் தமக்கிருப்பதாக கருதுகின்றனர். கலை இலக்கியவாதிகளின் நடமாட்டச் சுதந்திரத்திற்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் கடும் அச்சுறுத்தலை விளைவித்து வரும் இவர்கள் இப்போது டி.எம்.கிருஷ்ணாவின் குரல்வளையை நெறிப்பதற்கு மேற்கொண்டுவரும் இழிவான முயற்சிகளை தமுஎகச கண்டிக்கிறது. இவர்களது சகிப்பின்மையும் வெறுப்பரசியலும் தனது இசைப்பயணத்தையும் சமூகச் செயற்பாடுகளையும் தடுத்துவிட முடியாது எனத் தீரமுடன் செயலாற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தமுஎகச தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக்கொள்கிறது. என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.