நாமக்கல்,
அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக பலர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் உள்ள மின்விசிறிகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுக்கள் படையெடுப்பதால் நோயாளிகள் மட்டுமின்றி, உடன் இருப்பவர்களும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் புதிதாக வரும் நோயாளிகளை ஈரோடு அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலையே காணப்படுகிறது.எனவே, மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி பழுதடைந்த மின் விசிறிகளை உடனடியாக சரி செய்திட வேண்டும். மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமானமுறையில் பராமரித்திட வேண்டும். இதுகுறித்து மாவட்ட சுகாதார நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனஅந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.