சேலம்,
4 ஜி சேவை மற்றும் மூணாவது ஊதிய குழுவில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவை உடனடியாக வழங்கவேண்டும். மூன்றாவது ஊதியக்குழுவில் மாற்றம் செய்திட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கும்ஓய்வூதியம் மாற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து துவங்கிய பேரணியானது பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்றுபழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, இப்பேரணியை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம்.ஆர்.தியாகராஜன் துவக்கிவைத்தார். இதில் பிஎஸ்என்எல் இயு மாவட்டச் செயலாளர் இ.கோபால்,எஸ்எம் இஎ செயலாளர் ஆர்.மனோகரன், எஐபிஎஸ்என்எல்இஎ செயலாளர் எம்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மத்திய தொலைபேசி நிலையத்திலிருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு ஏயுஏபி மாவட்ட தலைவர் ஏ.ராபர்ட் தலைமை வகித்தார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்மாநில செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஏ.கே.பிரசன்னா, எஸ்.சக்திவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

தருமபுரி

தருமபுரி வேல் பால்டிப்போ அருகில் இருந்து துவங்கிய பேரணியை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தொலைபேசி நிலையத்தில் நிறைவுபெற்றது. இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்குமார் தலைமை வகித்தார். எஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலஉதவிசெயலாளர் எம்.பாபு, என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கே.மணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செளந்தரராஜன், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏ.பிரபாகரன், திமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அம்மாசி, ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.