புதுதில்லி, நவ.15-

பாஜக-வினர் நகரங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம், நாட்டின் பன்முகத்தன்மையையே மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் மேலும் நாட்டில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கக்கூடிய நிலையில் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு இம்முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்றும் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.

இதுதொடர்பாக புதன்கிழமையன்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் இரண்டறக்கலந்த ஒரு நாடாகும். இதில் முஸ்லீம்களின் பங்களிப்பினைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்தியாவின் கலாச்சாரத்தில் மொழியியல், கலைகள், உணவு மற்றும் இதர கலை வடிவங்களிலும் அவர்களின் பங்களிப்பு இருப்பதைத் தெளிவாக உய்த்துணரமுடியும். இதனை சீர்குலைத்திட பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது என்பது எந்த அளவிற்கு முஸ்லீம் மக்கள் மீது அவர்கள் வெறுப்பினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.”

இவ்வாறு பரூக் அப்துல்லா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.